
கொல்கத்தாவில், தன்னுடைய தந்தையின் கை ரிக்ஷாவில் அவரை உட்கார வைத்து இழுத்துச் சென்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
இதற்கு எத்தனை #ஷேர் குடுக்கலாம் நீங்களே தீர்மானியுங்க…!
கை ரிக்ஷாவில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அந்த வண்டியை இளம் பெண் ஒருவர் மகிழ்ச்சியாக இழுத்துச் செல்கிறார். படத்துக்கு மேல் தமிழில், “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தந்தை…
கொல்கத்தாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவி கை வண்டி இழுத்து படிக்க வைத்த தம் தந்தையை உலகுக்கு அறிமுகப்படுத்திய நெகிழ்ச்சியான மகிழ்ச்சியான காட்சி!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அந்த மாணவியின் பெயர், எந்த ஆண்டு டாப்பராக வந்தவர் என்று எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை. இந்தப் பதிவை, 2019 மே 11ம் தேதி Iswarya என்பவர் பகிர்ந்துள்ளார். இதற்கு எத்தனை ஷேர் கொடுக்கலாம் என்று நீங்களே தீர்மானியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். கை ரிக்ஷா இழுக்கும் தந்தைக்கும் – ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மகளுக்கு இடையேயான பாசமான காட்சி என்பதால் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஐ.ஏ.எஸ் டாப்பர் என்று கூறியிருப்பதால், 2018ம் ஆண்டு நடந்த தேர்வில் யார் முதலிடத்தைப் பிடித்தார்கள் என்று ஆய்வு மேற்கொண்டோம். 2018ம் ஆண்டு தேர்வின் முடிவுகள் 2019 ஏப்ரலில் வெளியானது. அதில், கனிஷ்க் கட்டாரியா என்பவர் முதலிடத்தைப் பிடித்தது தெரிந்தது. 2017ம் ஆண்டு முதல் இடத்தைப் பிடித்தவர் அனுதீப் துரிஷெட்டி. இதன் மூலம், கை ரிக்ஷாவை இழுக்கும் பெண் யார் என்பது கண்டறிய முடியவில்லை.
இதைத் தொடர்ந்து, படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இந்த படம் தொடர்பாக பல உண்மை கண்டறியும் கட்டுரைகள் வெளியாகி இருந்தது தெரிந்தது.

இந்தியா டுடே வெளியிட்டிருந்த கட்டுரையைப் படித்தோம். அதில், அந்த படத்தில் இருக்கும் பெண் ஐ.ஏ.எஸ் டாப்பர் இல்லை என்று தெரிவித்திருந்தனர். அந்த கட்டுரையில், “படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் ஷ்ரமோனா போடார் (Shramona Poddar). இவர் பிரபல நிறுவனங்களுக்கு பயணம் தொடர்பான கட்டுரைகளை எழுதுபவர். கொல்கத்தாவில் வசிக்கும் அந்த பெண்ணின் தந்தை ஒரு மருத்துவர்” என்பது தெரிய வந்துள்ளது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தை பதிவேற்றம் செய்ததும் தெரிந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அந்த பெண்ணிடம் பேசியபோது, “2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கு கொல்கத்தாவில் இந்த புகைப்படம் என்னுடைய நண்பரால் எடுக்கப்பட்டது. வடக்கு கொல்கத்தா செல்லும்போது எல்லாம் மக்களை அமர வைத்து கையால் இழுத்துச் செல்லும் ரிக்ஷாக்காரர்களைப் பார்க்கும்போது எல்லாம் வருத்தமாக இருக்கும். அவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும், இப்படி இழுத்துச் செல்வதை எப்படி உணர்வார்கள் என்று எல்லாம் தோன்றும்.
புகைப்படம் எடுக்கப்பட்ட தினத்தன்று, ஒரு கை ரிக்ஷாகாரரிடம், உங்களை உட்கார வைத்து நான் ரிக்ஷா இழுத்துச் செல்லட்டுமா என்று கேட்டேன். Wildcraft என்ற கட்டுரைக்காக போட்டோஷூட் எடுக்க வேண்டி இருந்தது. அவரை உட்காரவைத்து இழுத்துச் சென்றேன். அப்போதுதான் அது எவ்வளவு பெரிய வலி என்பது புரிந்தது. நான் இழுக்கும்போது அந்த தெருவே என்னைத்தான் பார்த்தது. அந்த கட்டுரை முழுவதையும் நான் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன்” என்றார்.
இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டது பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டபோது, “தெரியும். அதை நினைத்து கவலைப்பட்டேன். இதில் என் பெற்றோரையும் தொடர்புபடுத்தி எழுதியுள்ளதால், அவர்களுக்கும் நிறைய அலைபேசி அழைப்புகள் வந்தன” என்றார்.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டுள்ளது.
2017, 2018ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் விவரம் நமக்குக் கிடைத்துள்ளது. அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள பெண் முதலிடம் பெறவில்லை என்பது உறுதியானது.
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் இந்தியா டுடே உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய உண்மை கண்டறியும் ஆய்வுகள் நமக்குக் கிடைத்துள்ளது.
படத்தில் இருக்கும் பெண் ஐ.ஏ.எஸ் டாப்பர் இல்லை. அவருடைய தந்தை மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. பயணம் தொடர்பான கட்டுரைகளை எழுதுபவர் என்பதும் உறுதியானது.
ஒரு கட்டுரைக்காக கை ரிக்ஷாவை இழுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அந்த படம், இன்ஸ்டாகிராமில் நமக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட செய்திகள் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தந்தையை உட்காரவைத்து கை ரிக்ஷாவை இழுத்துச் சென்ற ஐ.ஏ.எஸ் மாணவி?
Fact Check By: Praveen KumarResult: False
