லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
லெபனானில் இஸ்ரேல் நடத்திய ருத்ர தாண்டவம் என்று ஒரு தாக்குதல் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஒரு கட்டிடம் வெடித்துச் சிதறும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "லெபனானில் இஸ்ரேல் ருத்ர தாண்டவம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து லெபனான் மீது தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 2024 செப்டம்பர் 17, 18 தேதிகளில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கம் மீது இஸ்ரேல் பேஜரை வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர்.
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஹிஸ்புல்லா செலுத்தியது. பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில் லெபனான் மீதான தாக்குதல் வீடியோ என்று சிலர் பழைய வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவும் அப்படிப்பட்ட பழைய வீடியோவாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவும் பல வீடியோக்களை ஒன்று சேர்த்து உருவாக்கியுள்ளனர். எனவே, ஒவ்வொரு வீடியோவையும் ஆய்வு செய்தோம். முதலில் தாக்குதல் நடத்தப்பட உள்ள கட்டிடத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். கடந்த சில நாட்களாக லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று சமூக ஊடகங்களில் பலரும் இந்த வீடியோவை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. சற்று பின்னோக்கி சென்று பார்த்த போது 2024 ஆகஸ்ட் 18ம் தேதியே இந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அந்த பதிவுகளில், காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் (Nusayrat camp in Gaza) மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 16க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செய்திகளும் நமக்குக் கிடைத்தன.
அடுத்ததாக தந்தையும் மகனும் சென்று கொண்டிருக்கும் போது அவர்கள் பின்னால் இருந்த கட்டிடம் வெடித்து சிதறும் வீடியோவை தேடினோம். அதுவும் 2024 ஆகஸ்ட் மாதம் நுசிராத் அகதிகள் முகாம் அருகே நடந்த தாக்குதலின் வீடியோ என்று ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பதைக் கண்டோம். எனவே, இதுவும் லெபனான் வீடியோ இல்லை என்பது உறுதியானது.
மூன்றாவதாக கார் சென்று கொண்டிருக்கும் போது கட்டிடம் வெடித்துச் சிதறும் வீடியோவை ஆய்வு செய்தோம். அந்த வீடியோவும் 2024 ஆகஸ்ட் மாதம் காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வேறு ஒரு தாக்குதல் சம்பவத்தின் வீடியோ என்று தெரியவந்தது. குடியிருப்பு பகுதியில் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீன ஊடகங்களில் இந்த வீடியோவுடன் செய்தி வெளியாகி இருந்தது.
கட்டிடத்தின் முன்பு ஒருவர் நிற்கும் வீடியோ காட்சியைத் தேடிய போது அதுவும் காசாவில் 2024 ஜூலை மாதம் நடந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. அது பள்ளிக் கட்டிடம் என்றும் அந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்டிடம் மீது குண்டு வந்து விழுந்து வெடிக்கும் வீடியோவும் காசாவில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. 2024 ஆகஸ்டில் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்த வந்த வீடியோ காட்சியில் அந்த சம்பவம் 2024 ஜூன் 3ம் தேதி புரேஜ் முகாமில் (Bureij Camp) நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து வந்த வீடியோ 2023 டிசம்பரில் பதிவு செய்யப்பட்டது. இப்படித் தொடர்ந்து பழைய வீடியோக்களாக அதில் இடம் பெற்றிருந்தன.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் பழைய வீடியோக்களை தொகுத்து, 2024 செப்டம்பரில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய காட்சி என்று தவறாகப் பகிர்ந்திருப்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வீடியோக்களை தொகுத்து லெபனான் மீதான தாக்குதல் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram