
சமஸ்கிருதமே இந்தியாவின் மூத்த மொழி, அதன் வரலாறே இந்தியாவின் வரலாறு என்று ஜே.பி.நட்டா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Facebook
பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா புகைப்படத்துடன் தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. அதில், “இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்க முடியாது. சமஸ்கிருதமே இந்தியாவின் மூத்த மொழி. அதன் வரலாறே இந்தியாவின் வரலாறு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை சிங்காரவேலு பட்டமங்கலம் என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 12ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணியின் போது கிடைத்த பொருட்களை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்த போது தமிழர் நாகரீகம் பல நூற்றாண்டுக்கு முந்தையது என்று கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடும்போது, “இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் எழுதப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பா.ஜ.க அகில இந்தியத் தலைவர் ஜே.பி.நட்டா மறுப்பு தெரிவித்தது போன்றும், அது தொடர்பான செய்தியை தினமலர் வெளியிட்டது போலவும் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
தினமலர் நியூஸ் கார்டில் தேதி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் எழுதப்பட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் 9ம் தேதி சட்டமன்றத்தில் பேசியிருந்தார். எனவே, செப்டம்பர் 9க்குப் பிறகு வெளியான தினமலர் நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம்.

அசல் பதிவைக் காண: Facebook
அப்போது. 2021 செப்டம்பர் 11ம் தேதி ஜே.பி.நட்டா புகைப்படத்துடன், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு நமக்கு கிடைத்தது. ஆனால் அதில், “உ.பி மட்டுமல்லாமல் உத்தரகாண்ட், கோவா, மணிப்பூரில் மீண்டும் பா.ஜ., நிச்சயம் ஆட்சி அமைக்கும் – நட்டா” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள் என்பது தெளிவானது.

இதை மேலும் உறுதி செய்துகொள்வதற்காக, அசல் மற்றும் போலியான நியூஸ் கார்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தோம். தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட், இந்த போலியான நியூஸ் கார்டில் இல்லை. மேலும், போலியான நியூஸ் கார்டை கொஞ்சம் பெரிதாக்கி பார்த்த போது, தமிழ் வாக்கியம் அமைந்துள்ள பகுதி மட்டும் தனியாக சேர்த்து போட்டோ எடிட் செய்யப்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது. இவை இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது தான் என்பதை உறுதி செய்தன.
அடுத்து, செப்டம்பர் 9ம் தேதிக்குப் பிறகு ஜே.பி.நட்டா கீழடி உள்ளிட்ட தமிழ் நாகரீக ஆய்வுக்கு எதிராக, சமஸ்கிருத வரலாறுதான் இந்தியாவின் வரலாறு என்று பேசினாரா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
இதற்கு முன்பு தமிழ் பண்பாடு, நாகரீகம் பற்றி நட்டா ஏதும் பேசியுள்ளாரா என்று பார்த்தோம். அப்போது, தமிழர் கலாச்சாரம் இல்லாமல் இந்தியக் கலாச்சாரம் முழுமை அடையாது என்று 2019ம் ஆண்டு ஜே.பி.நட்டா பேசியதாக செய்திகள் கிடைத்தன. தமிழ் கலாச்சாரத்தை விமர்சித்து அவர் பேசியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: business-standard.com I Facebook
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்தியாவின் வரலாற்றைத் தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜே.பி.நட்டா கூறினார் என்று பரவும் நியூஸ் கார்டு தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சமஸ்கிருத வரலாறே இந்தியாவின் வரலாறு என்று ஜே.பி.நட்டா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சமஸ்கிருத வரலாறே இந்தியாவின் வரலாறு என்று ஜே.பி.நட்டா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
