
கேரளாவில் கோவில் திருவிழாவில் பெண் போல வேடமிட்டு முதல் பரிசை வென்ற ஆண் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பெண்ணல்ல… கேரளாவில் நடந்த திருவிழாவில் பெண்களைப் போல ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு!!!*
*கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்குபெறும் திருவிழாவில் பெண்களைப் போல ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Ramesh Nag Keerthi என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் மார்ச் 28, 2023 அன்று பதிவிட்டிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதே படத்தை வைத்து Update News 360 என்ற இணைய ஊடகம் நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தது. அதில், “கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டம்குளகராவில் உள்ள ஶ்ரீதேவி கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்குபெறும் திருவிழாவில் பெண்களைப் போல ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் இந்த தகவலைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோவிலில் ஆண்கள் பெண் வேடமிட்டு வழிபாடு நடத்தினர் என்று செய்தி வெளியானது. இது சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. பார்ப்பதற்குப் பெண்ணைப் போலவே இருக்கும் இவர் ஆணா என்று ஆச்சரியமாக இருந்தது.
இந்த தகவல் உண்மையா என்று அறிய நம்முடைய மலையாளம் ஃபேக்ட் கிரஸண்டோ பிரிவின் உதவியை நாடினோம். இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக அவர்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதற்கிடையே அந்த நபர் பெண் இல்லை. அவர் ஒரு திருநங்கை. அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கண்டறிந்துள்ளோம். அதில் அவர் தன்னைப் பற்றிய சுய குறிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனால் அவர் பெண்ணாகப் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தன்னை ஒரு மாடல் என்றும் குறிப்பிட்டுள்ளார்” என்றனர்.

உண்மைப் பதிவைக் காண: instagram.com
இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் வெளியான செய்தியைப் பார்த்தோம். அதில், அதில் அவர்கள் கோவில் அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசியதாக குறிப்பிட்டிருந்தனர். கோவில் அதிகாரி ஜெயகிருஷ்ணா இது குறித்து கூறுகையில், “புகைப்படத்தில் இருப்பவர் ஆண் அல்ல, அவர் ஒரு திருநங்கை. பாலின மாற்ற அறுவைசிகிச்சை செய்துகொள்ளாத, அதற்கு தயாராக இருக்கும் திருநங்கைகள் இந்த விழாவில் பங்கேற்கத் தடையில்லை. அவர்கள் தங்களை திருநங்கைகள் என்று கூறிக்கொண்டாலும், கோவிலைப் பொறுத்தவரை அவர்கள் ஆண்களாகவே கருதப்படுவார்கள். படத்தில் இருப்பவர் முழுமையாக மாறாத திருநங்கை” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கோவிலில் சிறந்த மேக்அப் செய்துகொண்ட ஆண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது என்று கூறப்படும் தகவல் தவறானது. பெண்களைப் போன்று ஆடை – அலங்காரம் செய்துகொண்டு வழிபாடு செய்ய அனுமதிக்கிறோம்” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும், கடந்த ஆண்டும் இப்படி ஒரு செய்தி வெளியான போது ஃபேக்ட் செக் செய்த கட்டுரையையும் இணைத்திருந்தனர். ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்!
கேரளாவில் கொட்டாங்குளக்கரை தேவி கோவிலில் ஆண்கள் பெண்களைப் போன்று வேடமிட்டு வழிபாடு செய்வது உண்மைதான். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள நபர் ஆண் அல்ல… அவர் திருநங்கை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கேரளாவில் கோவில் திருவிழாவில் பெண் வேடம் அணிந்த ஆண் என்று பரவும் படத்தில் இருப்பவர் திருநங்கை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கேரளாவில் பெண் போல வேடமிட்டு வெற்றி பெற்ற ஆண் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
