அகிலேஷ் யாதவ் மீது காலணி வீசப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பிரசார வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "தேர்தல் ரோட் ஷோ ! உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது மக்கள் செருப்பு வீச்சு . டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கன்னத்தில் பளார் அறை . ஊழல்வாதிகளை பொதுமக்கள் ரவுண்டு கட்டி அடிக்கின்றனர் . இது I.N.D கூட்டணியின் வீழ்ச்சியை குறிக்கிறது . NDA கூட்டணியின் வளர்ச்சியை குறிக்கிறது " என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ரோடு ஷோ நடத்திய உ.பி முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டது என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோ தெளிவாக இல்லை... செருப்பு வீசப்பட்டிருந்தால் அகிலேஷ் யாதவ் மற்றும் கொண்டர்கள் கொந்தளித்திருப்பார்கள்... ஆனால் வீடியோவை பார்க்கும் போது அப்படி நடந்தது போன்று இல்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

முதலில் அகிலேஷ் யாதவ் பிரசாரத்தில் எங்காவது செருப்பு வீசப்பட்டதா... அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடத்திருந்தால் வட இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கும். குறைந்தபட்சம் பாஜக ஆதரவு செய்தி நிறுவனம் மற்றும் ஊடகங்களிலாவது வந்திருக்கும். அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்பதே இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்கிறது.

அடுத்ததாக இந்த வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் அகிலேஷ் யாதவுடன் ஒரு பெண்மணி இருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற இடத்தில் அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட வீடியோ என்று என்டிடிவி வெளியிட்டிருந்த யூடியூப் முகப்பு படமும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் ஒத்துப்போனது. அந்த செய்தியில் அகிலேஷ் யாதவ் மீது காலணி வீசப்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் ஓரளவுக்கு தெளிவான வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஒருவர் பதிவேற்றியிருந்தார். அந்த வீடியோவை நொடிக்கு நொடி பல ஃபிரேம்களாக மாற்றி காலணி ஏதும் வீசப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தோம். நொடிக்கு நொடி புகைப்படமாக மாற்றிப் பார்த்த போது பூ மாலைகள் அகிலேஷ் யாதவ் மீது வீசப்பட்டதை காண முடிந்தது. எந்த ஃபிரேமிலும் காலணி எதுவும் காணப்படவில்லை.

ஒரு ஃப்ரேமில் செருப்பு போல தெரிந்த பூ மாலை, அகிலேஷ் யாதவ் பிரசார வாகனத்தின் மீது பட்டு கீழே விழும் அடுத்த ஃப்ரேமில் போது பூ மாலையாக தெளிவாகத் தெரிந்தது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தியிலும் கட்டுரை வெளியாகி உள்ளது.

நம்முடைய ஆய்வில் அகிலேஷ் யாதவ் மீது காலணி வீசப்பட்டதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. மேலும், வீடியோவை ஒவ்வொரு ஃபிரேமாக மாற்றி பாிசோதனை செய்த போது அதிலும் பூ மாலைகளை மட்டுமே காணப்பட்டது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அகிலேஷ் யாதவ் மீது காலணி வீசப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தேர்தல் பிரசாரத்தின் போது அகிலேஷ் யாதவ் மீது காலணிகள் வீசப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அகிலேஷ் யாதவ் மீது காலணி வீசப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False