
கடலில் நைலான் கயிற்றில் சிக்கிக்கொண்ட ஆமையை சுறா மீன் ஒன்று காப்பாற்ற முயற்சி செய்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கடலில் ஆமை ஒன்றை சுறா மீன் கடிக்க முயற்சி செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. படகில் அந்த ஆமையை ஏற்ற சுறா மீன் முயல்வது போன்று காட்சி உள்ளது. ஆமையின் கழுத்தில் சுற்றியிருந்த கயிற்று அகற்றப்படுகிறது. சுறா அந்த ஆமையை காப்பாற்றியதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “நம்பமுடியாத செயல். கடலில் ஒரு படகைக்கண்ட சுறா, அதில் ஒரு இளைஞன் உள்ளதை பார்த்தபின் தன் வாயில் ஒரு ஆமையை கவ்விக்கொண்டு அப்படகில் ஏறும் ஏணியில் கொண்டுவந்து சேர்த்த பின் தான் இருந்தால் அவ்விளைஞன் அதை காப்பாற்ற முன் வரமாட்டான் என்று அறிந்து அவ்விடத்தை விட்டு அகன்றது.
அதன்பின் அவ்விளைஞன் அந்த ஆமையை படகின் மேல் கொண்டு வந்து சோதனை செய்கையில் அதன் கழுத்தில் இரண்டு கயிறுகள் இறுக்கி ஆமை மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதை அறிந்தான். பின் கத்தியினால் அந்த கயிற்றை அறுத்து ஆமை மூச்சு விட செய்து பின் கடலிலேயே அவன் அந்த ஆமையை விடுவித்தான்.
இதை கவனித்து நோக்கினால் மாமிசத்தை உணவாக உட்கொள்ளும் சுறாமீன், *மனிதனால் மட்டுமே மற்ற உயிரனங்களை காப்பாற்ற முடியும்* என்பதை அறிந்துள்ளது. இதை நன்கு உணர்ந்து மனிதன் செயல்பட்டால் மட்டுமே இவ்வுலகை காப்பாற்ற முடியும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை முனைவர் கார்த்திகேயன் கோட்டைச்சாமி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 2ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சுறா மீனின் இயல்பே மற்ற உயிரினங்களை தாக்குவதுதான். ஆனால், சுறா ஒன்று ஆமையைக் காப்பாற்றியது என்று பரவும் வீடியோ சந்தேகத்தை ஏற்படுத்தியது. வீடியோவும் தெளிவின்றி உள்ளது. எனவே, என்ன நடந்தது என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோவில், “Watch more original videos by: Adleyt” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Adleyt என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த வீடியோவை வெளியிட்டதாக குறிப்பிடப்படவே, அவரது பக்கத்தில் அசல் வீடியோவை தேடினோம். ஷார்க், டைகர் ஷார்க், ஆமை என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது, கயிறு வலையில் மாட்டிய ஆமை வீடியோவை அந்த நபர் 2021ம் ஆண்டு வெளியிட்டிருப்பது தெரிந்தது. அந்த வீடியோவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் இரண்டாவது பகுதியும் ஒன்று என்பது தெளிவானது.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, யூடியூப் வீடியோவில் குறிப்பிட்ட காட்சி இருப்பது போன்று முடிவுகள் நமக்குக் கிடைத்தன. அந்த வீடியோவை பார்த்தோம். வீடியோவின் 6.30வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சி வந்தது. வீடியோவை எடுத்தவர் ஆமையைக் காப்பாற்றப் போகிறோம் என்கிறார். சுறாவை துரத்திவிட்டு, ஆமையைக் காப்பாற்றி படகுக்குள் கொண்டு வருகின்றனர். அதில் ஆமையின் கழுத்தில் கயிறு எதுவும் இல்லை. சிறிது தூரத்துக்கு படகை ஓட்டிச் சென்று மீண்டும் அதை கடலில் விடுகின்றனர். டைகர் ஷார்க் என்ற ஒரு வகை சுறாவிடமிருந்து ஆமையை காப்பாற்றினோம் என்று அந்த நபர் கூறுகிறார். எனவே, ஆமையைக் காப்பாற்றிய சுறா என்ற தகவல் தவறானது என்பது தெளிவானது.
நம்முடைய தேடலின் போது, கழுத்தில் கயிறு மாட்டி பாதிக்கப்பட்ட ஆமை வீடியோவும் 6 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. பழைய கயிறு அந்த ஆமையின் கழுத்தைச் சுற்றி மாட்டியிருந்ததை, கடல்வாழ் உயரின ஆர்வலர்கள் அகற்றி, அந்த ஆமைக்கு மருந்திடுவதை அந்த வீடியோவில் காண முடிந்தது. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் கூட இது தொடர்பான கட்டுரை வெளியாகி உள்ளது. அதை காண இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடலில் சுறாவிடமிருந்து ஆமையைக் காப்பாற்றிய வீடியோ, கடலில் வீசப்பட்ட பழைய மீன் வலையில் சிக்கிய ஆமையைக் காப்பாற்றிய வீடியோ என இரண்டு வெவ்வேறு வீடியோக்களை எடுத்து, ஒன்று சேர்த்து, ஆமையைக் காப்பாற்றிய சுறா என்று தவறான தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கழுத்தில் பழைய கிழிந்த வலையின் கயிறு மாட்டி உயிருக்கு போராடிய ஆமையை காப்பாற்ற மனிதர்களின் உதவியை நாடிய சுறா என்று பரவும் வீடியோ உண்மையானது இல்லை. இரண்டு வீடியோக்களை எடிட் செய்து தவறான புரிதல் ஏற்படும் வகையில் பகிரப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஆமையைக் காப்பாற்ற மனிதர்களிடம் உதவி நாடிய சுறா என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
