FACT CHECK: தேவேந்திரகுல வேளாளர் ஓட்டு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு தி.மு.க-வுக்கு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அக்டோபர் 12, 2020 அன்று ஸ்டாலின் படத்துடன் வெளியான சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக கூட்டணி பலமான கூட்டணி. தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு திமுகவிற்கு தேவையில்லை. அவர்கள் ஓட்டுப்போட்டு நான் முதல்வராக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “மானம் கெட்ட தேவேந்திர குல வேளாளர் மக்களே திமுக கு சொம்பு அடிக்குர நாய்கள் இதை பார்த்து கூட திருந்தமாட்டார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நியூஸ் கார்டை தேவேந்திர குல வேளாளர் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 அக்டோபர் 13ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் தேவையில்லை என்று தமிழகத்தில் எந்த கட்சியும் கூறாது. அப்படி இருக்கும் போது தி.மு.க தலைவர் கூறினார் என்று பகிரப்பட்டுள்ளது.

சன் நியூஸ் வழக்கமாக வெளியிடும் நியூஸ் கார்டுதானா இது என்று பார்த்தோம். அப்போது இந்த டிசைன் புதிதாக அவர்கள் அறிமுகப் படுத்தியது என்பது தெரிந்தது. அதே நேரத்தில் ஃபாண்ட் வித்தியாசம் இருந்தது. எழுத்துப் பகுதியில் உள்ள டிசைன் மட்டும் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. எனவே, சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த அசல் பதிவைத் தேடினோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அக்டோபர் 12ம் தேதி என்று அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்ததால் குறிப்பிட்ட தேதியில் வந்த நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது, “திமுக கூட்டணியை அசைக்க முடியாது. தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என முயற்சிப்பவர்கள் கலகலத்துப் போவார்கள். அதீத கற்பனை, ஊகத்தின் அடிப்படையில் எதையாவது கூறி திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமான தகவலைச் சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதியானது.

இதை மேலும் உறுதி செய்ய சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு தலைவர் மனோஜை தொடர்புகொண்டு பேசினோம். அவர் இது போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்தார். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு தேவையில்லை என்று ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தேவேந்திரகுல வேளாளர் ஓட்டு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered