
பாரீஸ் நகரின் சாலைகளில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தார்கள் என்றும் இதைப் பார்த்து இந்துக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் வீடியோ மற்றும் தகவலை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “இதைப் பார்த்தாவது விழித்துக் கொள்ளுங்கள் இந்துக்களே🙏* This is Paris today. May be Bharat tomorrow, with wide spread Islam. If we don’t wake up now and act, again Aurangzeb’s Jizya rule will slap Hindus in Bharat. Just watch and weep” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளதா என்று பார்த்தோம். Subramani என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 25ம் தேதி இந்த வீடியோ மற்றும் பதிவை பகிர்ந்திருந்தார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
எல்லா மதத்தினரும் ஊர்வலம், வழிபாடு போன்றவற்றுக்கு பொது சாலைகளை பயன்படுத்திக்கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால், குறிப்பிட்ட ஒரு மதத்தினர், அதுவும் வேறு ஒரு நாட்டில் வழிபாடு செய்தால் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு ஆபத்து என்பது விஷமத்தனமாக பதிவிட்டுள்ளனர். ஆபத்து உள்ளதா இல்லையா என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. இந்த வீடியோ பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் எடுக்கப்பட்டதா இல்லையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ பாரீஸில் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்தது. வீடியோவில் இருந்த கட்டிடம் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருப்பதாக பதிவுகள் நமக்கு கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகளின் புகைப்படங்களை சிலர் பதிவிட்டு மாஸ்கோவில் ஈத் பண்டிகை தொழுகை காட்சி என்று பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது.
தொழுகையானது மாஸ்கோவில் உள்ள கதீட்ரல் மசூதியில் நடந்தது என்று குறிப்பிட்டு பல வீடியோக்கள், செய்திகள் நமக்கு கிடைத்தன. கதீட்ரல் மசூதியை கூகுள் மேப்பில் தேடி எடுத்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள மசூதி, மாஸ்கோவில் இருப்பது உறுதியானது.
தொடர்ந்து தேடிய போது, மாஸ்கோ கதீட்ரல் மசூதியில் ஈத் பண்டிகை தொழுகை தொடர்பாக ரஷ்ய மொழியில் பல வீடியோக்கள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. மேலும் smotrim.ru என்ற இணையதளத்தில் 2016ல் இருந்து 2022 வரை ஏழு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஈத் தொழுகை வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். அனைத்திலும் சாலைகளில் மக்கள் தொழுகை செய்யும் காட்சிகள் இருந்தன. அதில், இருந்து இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. ஆனால், இந்த வீடியோ பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எடுக்கப்பட்டது இல்லை என்பது மட்டும் உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: smotrim.ru I Archive 1 I 1tv.ru I Archive 2
ரஷ்யாவில் நடந்ததை ஏன் பிரான்சில் நடந்ததாக கூற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ரஷ்யாவில் எவ்வளவு இஸ்லாமியர்கள் உள்ளனர் என்று பார்த்தோம். அங்கு 10 சதவிகிதம் அளவுக்கு இஸ்லாமியர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. சில மாகாணங்களில் 95 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் இஸ்லாமியர்கள். அதனால் ரஷ்யாவில் இஸ்லாமியர்கள் நுழைந்துவிட்டார்கள் என்று கூற முடியாது என்பதால் பாரீஸில் இந்த நிலை என்று பகிர்ந்திருக்கலாம்.
நம்முடைய ஆய்வில், பாரீஸில் இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்தினர் என்று பரவும் வீடியோ, பாரீசில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய வீடியோவை பிரான்சின் தலைநகர் பாரீஸில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினார்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பாரீஸ் நகரில் இஸ்லாமியர்கள் தொழுகை என பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: PARTLY FALSE
