
காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக, தினமலர் செய்தி வெளியிட்டு பிறகு அதனை திருத்திக் கொண்டதால் சமூக ஊடகங்களில் குழப்பம் நிலவுகிறது.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
“காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பா.ஜ.-வில் ஐக்கியம்” என்று தினமலர் செய்தி வெளியிட்டது போன்ற ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது.
இந்த படத்தை Srisai Selvam என்பவர் அக்டோபர் 7, 2020 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இது போன்று ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திக் விஜய் சிங்கின் மகள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது போன்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தினமலர் வெளியிட்டது போன்ற பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி பா.ஜ.க ஆதரவு தளங்கள் பலவற்றிலும், ஆதரவாளர்கள் பலரும் இந்த தகவலை பகிர்ந்து வருவதையும் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஸ்ரேயாஷி சிங் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவரது தந்தையின் பெயரும் திக் விஜய் சிங். இவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தவர். இதனால், பெயர் குழப்பம் காரணமாக தவறான செய்தி வெளியாகி இருக்கலாம் என்று தெரிந்தது.
தினமலர் பக்கத்தில் குறிப்பிட்ட செய்தியைத் தேடிப் பார்த்தோம். அதில், மிகத் தெளிவாக “மாஜி மத்திய அமைச்சர் திக் விஜய் சிங் மகள் பா.ஜ.,வில் ஐக்கியம்” என்று தலைப்பிடப்பட்டு இருந்தது. செய்தியின் உள்ளே “மறைந்த பீகார் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான திக் விஜய் சிங் மகளும் தேசியத் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான ஸ்ரேயாஷி சிங், இன்று(அக்.,5) பா.ஜ.,வில் இணைந்தார்” என்று குறிப்பிட்டிருந்தனர். எந்த இடத்திலும் இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கின் மகள் என்று குறிப்பிடவில்லை.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive
பிறகு எப்படி சமூக ஊடகங்களில் தினமலர் பெயரில் போலியான செய்தி பரவுகிறது என்ற கேள்வி எழுந்தது. தினமலர் செய்தி ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருந்ததைத் தேடி எடுத்தோம். அதில் மாஜி மத்திய அமைச்சர் திக் விஜய் சிங் மகள் பா.ஜ வில் ஐக்கியம் என்று இருந்தது. ஆனால், செய்தியின் தலைப்பில் காங். மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பா.ஜ.வில் ஐக்கியம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் மூலம் முதலில் தவறான செய்தியை வெளியிட்டுவிட்டு பிறகு திருத்தியிருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்ய அந்த பதிவின் எடிட் வரலாற்றைப் பார்த்தோம். அக்டோபர் 5ம் தேதி இரவு 10.37 மணிக்கு காங்கிரஸ் தலைவர் மகள் என்று குறிப்பிட்டு செய்தி பரப்பியது தெரிந்தது. பிறகு உண்மை தெரிந்து அக்டோபர் 6ம் தேதி காலை 8.13 மணிக்கு மாஜி அமைச்சர் மகள் என்று மாற்றியிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
திக் விஜய் சிங் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்த போது, முதலில் இந்த செய்தியை ஆஜ்தக் வெளியிட்டிருப்பது தெரிந்தது. இது பற்றி பதிவிட்டுள்ள திக் விஜய் சிங், “மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை உறுப்பினருமான திக் விஜய் சிங் மகள் ஸ்ரேயாஷி சிங் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்று ஆஜ்தக் செய்தி வெளியிட்டுள்ளது. ஆஜ்தக் போலி செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதை அவதூறு வழக்காக கோர முடியுமா? ஸ்யோஷி சிங் என் மகள் இல்லை” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், பெயர் குழப்பம் காரணமாக தினமலர் வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பலரும் பரப்பி வருவது உறுதியாகிறது.
தன்னுடைய தவற்றைத் தெரிந்து தினமலர் திருத்திக் கொண்டுவிட்டது. ஆனால், இன்னமும் பலர் இதன் உண்மைத்தன்மை அறியாமல் பகிர்ந்து வருகின்றனர்.
ஸ்ரேயாஷி சிங் தன்னுடைய மகள் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கும் மறுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கின் மகள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பா.ஜ.க-வில் இணைந்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
