தமிழக முதல்வர் பழனிசாமி தனது மகளுக்கு தங்கத்திலான தையல் மெசின் வாங்கி கொடுத்தாரா?

அரசியல் | Politics சமூக வலைதளம்

‘’தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது மகளுக்காக தங்கத்தில் தையல் மெஷின் வாங்கி கொடுத்தார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Ponnurangam Chockalingam என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இவரைப் போலவே, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்ந்துள்ளனர். அதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட் கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:

இவர்கள் குறிப்பிடுவதைப் போல, மேற்கண்ட புகைப்படத்தில் இருக்கும் தையல் மெசின் எடப்பாடி பழனிசாமி தனது மகளுக்காக வாங்கியது கிடையாது. அத்துடன் எடப்பாடி பழனிசாமிக்கு, மகளே கிடையாது. அவருக்கு இருப்பது ஒரு மகன்தான். இதுகூட தெரியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பேரில் இத்தகைய வதந்திகளை கிளப்பிவிட்டு, ஒரு மாநிலத்தின் முதல்வராக உள்ளவர் மீது களங்கம் விளைவிப்பதை சிலர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணம்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகள்.

இதேபோல, இவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் இருப்பது தையல் மெசின் கிடையாது. அது தையல் மெசின் போல டிசைன் செய்யப்பட்ட ஒரு கடிகாரமாகும். ஆம். அந்த புகைப்படத்தை உற்று பார்த்தாலே இந்த உண்மை எளிதில் விளங்கும்.

அதாவது, ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ள தற்காலத்தில், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், புதுப்புது தயாரிப்புகளை இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அறிமுகம் செய்வது வழக்கமாக உள்ளது. இதன்படி, giftsonline.net என்ற இணையதளம் பைக், தையல் மெசின், கார் போன்றவற்றின் மினியேச்சர் வடிவங்களை அடிப்படையாக வைத்து, அவற்றில் வாட்ச் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் மேற்கண்ட வாட்ச் வைக்கப்பட்ட தையல் மெசினும். இதுபோன்ற தயாரிப்புகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, எடப்பாடி பழனிசாமிக்கு மகள் கிடையாது. அத்துடன், இது தங்கத்தில் செய்த தையல் மெசின் கிடையாது. இது மினியேச்சர் வடிவிலான ஒரு கடிகாரம். ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இந்த கடிகாரம் தங்க முலாம் பூசப்பட்டதாகும். எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு, தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழக முதல்வர் பழனிசாமி தனது மகளுக்கு தங்கத்திலான தையல் மெசின் வாங்கி கொடுத்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False