மத்திய பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் மற்றும் தொண்டர்களை பொது மக்கள் தாக்கினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்களை வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மத்தியப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கருத்து கேட்கச் சென்றபோது மக்கள் தாக்கியுள்ளனர். எல்லா வாக்காளர்களும் நினைக்கிறார்கள். பாஜக நாட்டுக்கு எவ்வளவு ஆபத்தானது. இது இப்போது நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் நடக்க வேண்டும். தமிழர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சகோதரர்கள் விழித்துக்கொள்ளும் நேரம் பயங்கரமானது. 👍 👍 அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும் சங்கி எவ்வளவு ஆபத்தானவன் என்று" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Ksm Buhari என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 அக்டோபர் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் பாஜக வேட்பாளர் மற்றும் தொண்டர்களை பொது மக்கள் தாக்கினார்கள் என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது.

தாக்குபவர்கள் கழுத்தில் இளஞ்சிவப்பு நிற பட்டை அணிந்துள்ளனர். ஒரு பேனரில் KCR என்று உள்ளது. கடைகளில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இவை எல்லாம் இந்த வீடியோ தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்பதை நினைவூட்டுகின்றன. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் மீது தாக்குதல் என்று இந்த வீடியோவை 2022 பிப்ரவரியில் பலரும் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அவற்றில் பல மிகவும் தெளிவான காட்சிகள் கொண்ட வீடியோக்கள் இருந்தன. அதில் கடைகளில் தெலுங்கு மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பதை தெளிவாகக் காண முடிந்தது.

ஒரு வீடியோவில் போலீஸ் பூத் ஒன்றில் "Jangaon Traffic Police" என்று எழுதப்பட்டிருந்ததைத் தெளிவாக காண முடிந்தது. அதை கூகுள் செய்து பார்த்த போது தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் அப்படி ஒரு காவல் நிலையம் இருப்பது உறுதியானது.

இதன் அடிப்படையில் தெலங்கானா, டிஆர்எஸ், பாஜக, தாக்குதல் என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் வெளியான பல செய்திகள் நமக்கு கிடைத்தன. தெலங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் எரித்துள்ளனர். இதை எதிர்த்த பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

உண்மைப் பதிவைக் காண: thehansindia.com I Archive

இதன் மூலம் பாஜக தொண்டர்களை பொது மக்கள் தாக்கியதாக கூறும் வீடியோ மத்திய பிரதேசத்தை சார்ந்தது இல்லை. தெலங்கானாவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை எடுத்து தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மத்திய பிரதேசத்தில் பாஜக வேட்பாளரை பொது மக்கள் விரட்டி அடித்தனர் என்று பரவும் வீடியோ 2022ல் தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ம.பி-யில் பாஜக வேட்பாளரை தாக்கிய மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False