
ரஃபேல் விமான ஆவணங்கள் திருடுபோன போது தன்னுடைய கடிகார ரசீதும் திருடு போய்விட்டது என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கடந்த 2019ம் ஆண்டு ரஃபேல் ஆவணங்கள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டன.
என்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் அந்த ஆவணங்களுடன் திருடு போய்விட்டது. – பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Ajith என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ரஃபேல் லிமிடெட் எடிஷன் கடிகாரம் தொடர்பான சர்ச்சை தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடிகாரம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூற, அண்ணாமலை அதை வெளியிடாமல் உள்ளார். இந்த நிலையில், தன்னுடைய ஆவணங்கள் திருடுபோய் விட்டது என்று அண்ணாமலை கூறியதாகப் பலரும் நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.
ரஃபேல் விமானங்கள் தொடர்பான ஆவணங்கள் திருடு போனதற்கும் அண்ணாமலையின் கைகடிகார பில் தொலைந்ததற்கும் தொடர்பு இல்லை. அண்ணாமலையை நக்கல் செய்யும் வகையில் யாரோ இந்த நியூஸ் கார்டை உருவாக்கியது போல உள்ளது. இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது. எனவே, இது போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
முதலில் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டு வெளியாகி இருப்பது தெரிந்தது. ஆனால், அதில் உள்ள தகவலை மட்டும் மாற்றியிருப்பது தெரிந்தது. தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டில் “ரபேல் கடிகாரம் குறித்து அனைத்து அமைச்சர்களும் பேச வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஊழல் குறித்து வெளியே கொண்டு வர முடியும் – கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதை உறுதி செய்ய தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரஃபேல் கைகடிகாரம் வாங்கியதற்கான ஆவணங்கள் தொலைந்துவிட்டது என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ரஃபேல் கடிகார ரசீது திருடு போய்விட்டது என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
