
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடியை சீக்கியர்கள் அவமதித்தார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2
சீக்கியர் ஒருவர் இந்திய தேசியக் கொடியை காலணியால் அடித்து அவமரியாதை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதுதான் விவசாயிகள் போராட்டமா.????” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த பதிவை Kavi Saranya என்பவர் 2020 டிசம்பர் 9ம் தேதி பகிர்ந்துள்ளார்.
ராசா தீ என்ற ஃபேஸ்புக் பதிவர் இந்த படத்தை 2020 டிசம்பர் 10ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “இது விவசாயிகளுக்கான போராட்டம் என்று நம்பினால் நீயும் மடையனே” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர்களைப் போல பலரும் இந்த படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நடந்தது என்று சீக்கியர்கள் வெளிநாட்டில் நடத்திய பல போராட்ட படங்கள், வீடியோக்களை எல்லாம் எடுத்து வந்து தற்போது டெல்லியில் நடந்தது என்று கூறி விவசாயிகள் போராட்டம் பற்றிய தவறான தகவலை சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்யும் நிகழ்வு டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் நடந்தது என்று பகிரப்பட்டுள்ளது. எனவே, இது உண்மையில் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளாகவே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் உலாவி வருவதைக் காண முடிந்தது. ட்விட்டரில் 2016ம் ஆண்டு ஒருவர் இந்த படத்தை பகிர்ந்திருந்தார். அந்த படம் மிகத் தெளிவாக இருந்தது. அதில் இந்த புகைப்படம் ஆகஸ்ட் 15, 2013 அன்று எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் DAL KHALSA U.K என்று லோகோவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அசல் பதிவைக் காண: Twitter I Archive
புகைப்படத்தில் இருந்த தேதியை, யுகே என்ற அடையாளத்தை சௌகரியமாக அகற்றிவிட்டு இப்போது நடந்தது போல பதிவிட்டிருப்பது உறுதியானது. இதன் மூலம் இந்த புகைப்படம் வேளாண் சட்டத்தை எதிர்த்து 2020ம் ஆண்டு டிசம்பரில் நடந்து வரும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.
சரி இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்று தேடினோம். தொடர்ந்து தேடியபோது, dal khalsa என்ற பிளாக்கில் பதிவிட்டிருந்தனர். இந்த படம் லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்பு நடந்த சீக்கியர்களின் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. சீக்கியர்களின் தாயகமான பஞ்சாபை இந்தியாவுடன் இணைந்து 1947ம் ஆண்டு சுதந்திரம் வழங்கப்பட்டதை எதிர்த்து 2013ம் ஆண்டு இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி போராட்டம் நடந்தது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அசல் பதிவைக் காண: dalkhalsa.blogspot.com I Archive
இதன் மூலம் இங்கிலாந்தில் வாழும் சீக்கியர்கள் தனி நாடு கேட்டுப் போராடி வரும் போராட்டத்தின் படத்தை இந்தியாவில் தற்போது 2020ம் ஆண்டு நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
2013ம் ஆண்டு லண்டனில் நடந்த சீக்கியர்கள் போராட்ட படத்தை தற்போதைய விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.