
கோவை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய படுக்கை வசதி இல்லாத நிலையில் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை பார்க்காமல் காலியாக உள்ள மருத்துவமனை படுக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
படுக்கை வசதி இன்றி மருத்துவமனையில் மக்கள் அவதியுறும் படம் ஒன்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் படுக்கை வசதிகளை ஆய்வு செய்யும் படத்தையும் ஒன்றாக சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் உள்ள படத்தின் மீது ரியல் என்றும், மு.க.ஸ்டாலின் படத்தின் மீது ரீல் என்றும் எழுதப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “இதான் நிலமை..!!! இவங்களுக்கு கதை வசனம் சினிமா ஷூட்டிங் இதுவே பொழப்பு ஆயிட்டது.. என்ன பண்ண?? காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட ஜனம் எல்லாம். நல்லவங்க ளையும் தன்னோடு சுடுகாட்டுக்கு கூட்டி போகுது.. !!! எச்ச பொழப்பு க்கு நாட்டை முடிசிட்டீங்களே…??? கொலகார பாவிங்களா!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மே 23ம் தேதி பதிவிட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பார்த்திபன் ஜெகநாதன் என்பவர் 2021 மே 21 அன்று வெளியிட்டுள்ள பதிவில், “கோயம்புத்தூர்……… படம் 1 : முன்கள பணியாளர்கள் காட்டுவது . 2 வது படம் : உண்மை நிலவரம் ( கோவை அரசு மருத்துவமனை)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டரில் K.Ashok adv என்பவர் மே 20 அன்று வெளியிட்ட பதிவில், “தமிழக அரசு மருத்துவமனையில் கொரொன வைரஸை பரவாமல் இருக்க இந்த முறையை பின்பற்றினார்கள். பாராட்டலாமா எல்லோரும். ஆளும் திமுக அரசின் பெரிய சாதனை” என்று குறிப்பிட்டிருந்தார். பலரும் இந்த படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் கொரோனாத் தொற்று மிகத் தீவிரமாக உள்ளது. மார்ச் மாதத்தில் உயரத் தொடங்கிய கொரோனா தொற்று மே மாதம் தொடக்கத்தில் 20 ஆயிரத்தை எட்டியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறியதன் விளைவு தற்போது உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த சூழலில், கோவை மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் ஒரே படுக்கையில் இரண்டு மூன்று பேராகவும் தரையிலும் படுத்திருக்கும் படத்தைப் பகிர்ந்து இதுதான் உண்மை நிலை என்று பகிர்ந்து வருகின்றனர். இந்த படம் கோயம்புத்தூரில் எடுத்ததா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஏஷியாநெட் தமிழில் வெளியான செய்தி ஒன்றில் இந்த புகைப்படம் இருந்தது. “கோவையில் ஆக்ஸிஜன் படுக்கைக்குத் தட்டுப்பாடு… தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை…!” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்று எந்த குறிப்பும் இல்லை. கட்டுரை கோவை பற்றியதாக இருந்ததால், இந்த புகைப்படமும் கோவையில் எடுக்கப்பட்டதாக இருக்கும் என்ற தோற்றமே ஏற்பட்டது.

அசல் பதிவைக் காண: asianetnews.com I Archive
வேறு வேறு பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டதாக பல பதிவுகள் செய்திகள் கிடைத்தன. 2019 டிசம்பரில் இந்த படத்துடன் வங்க மொழியில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. பொது மருத்துவர் சபியாசாச்சி சென்குப்தா என்பவர் இந்த படத்துடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். வங்க மொழியில் இருந்த கட்டுரையை கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்து பார்த்தோம். அதில் இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்று இல்லை. டார்ஜிலிங் என்று எல்லாம் குறிப்பிட்டிருப்பதன் மூலம் மேற்கு வங்கம் என்பது மட்டும் புரிந்தது.

அசல் பதிவைக் காண: thedoctorsdialogue.com I Archive
வேறு பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சூர்யா காந்த மிஸ்ரா என்பவர் இந்த படத்தை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், மேற்கு வங்க மாநிலம் “பர்த்தமான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண்கள் பொது வார்டின் உண்மை புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பெண்கள் வார்டு என்று குறிப்பிட்டு அதில் ஆண்கள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் இது கோவையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்பதும், 2021 மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் ஆய்வு மேற்கொண்ட போது எடுக்கப்பட்டது இல்லை என்றும் உறுதியானது.
இதன் அடிப்படையில் மேற்கு வங்க படத்தை வைத்து தமிழகத்தின் கோயம்புத்தூர் மருத்துவமனையின் அவல நிலை என்று விஷமத்தனமான தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.
முடிவு:
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையின் அவல நிலை என்று பகிரப்படும் படம் மேற்கு வங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கோவை மருத்துவமனையின் அவல நிலை என்று பகிரப்படும் மேற்கு வங்க புகைப்படம்!
Fact Check By: Chendur PandianResult: False
