FACT CHECK: ஒடிஷா கோனார்க் கோவில் என்று பகிரப்படும் தாய்லாந்து கோவில் படம்!

இந்தியா | India சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

ஒடிஷாவில் உள்ள கோனார்க் கோவிலில் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சூரிய உதய காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கோவிலுக்குள் சூரியன் பிரகாசமாக தெரியும் காட்சி பகிரப்பட்டுள்ளது. அதில் “ஒரிசா, கொனார்க் கூயில். கோயிலுக்குள் இருந்து சூரியன் எழுகிறது. இது 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கிறது. இந்த தங்கச் சிங்க் படத்தை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள், ஏனென்றால் இன்று அனந்தச்சூர்துஷியை அனுப்பியவர், இதை ஏற்றுக்கொள்பவரும், செல்வத்தால் ஆசிர்வதிப்பார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை ஆன்மீகச் சிந்தனைகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Kulasekar என்பவர் 2021 ஜூன் 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கோனார்க் சூரிய கோவிலில் உள்ள சிவ லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் காட்சி என்று ஒரு வதந்தி பரவியது. உண்மையில் அது அமெரிக்காவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் உருவாக்கப்பட்ட பனிக்கட்டி லிங்கம் என்பது நம்முடைய ஆய்வில் தெரியவந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். 

இந்த நிலையில் கோனார்க் சூரிய கோவிலில் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சூரிய ஒளி கோவிலுக்குள் நுழையும் காட்சி என்று படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஒடிஷாவில் உள்ள கோனார்க் கோவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பார்க்கும்போது கோனார்க் போல தெரியவில்லை. கோனார்க் கோவில் ஒரே கோபுரம் கொண்ட கட்டிடமாக இருக்கும். இது நீளமான கட்டிடத்தில் கோபுரம் அமைக்கப்பட்டது போல உள்ளது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் கோனார்க் கோவில் படத்தையும் இதையும் ஒன்றாக வைத்து ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்போது இது கோனார்க் கோவில் இல்லை என்பது உறுதியானது. அடுத்து இது எங்கு உள்ள கோவில் என்பதை ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Google Map I updateodisha.com I Archive

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது தாய்லாந்து நாட்டில் உள்ள ஃபனோம் ரங் (Phanom Rung) வரலாற்று பூங்கா என்று குறிப்பிட்டு பலரும் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் பலரும் இதைக் கோனார்க் கோவில் என்றும் அங்கோர் வாட் என்றும் குறிப்பிட்டுப் பதிவிட்டு வருவதையும் காண முடிந்தது. அதே நேரத்தில் 2010ம் ஆண்டில் இருந்து இந்த படத்தை பலரும் தாய்லாந்து மொழியில் பதிவிட்டிருப்பதையும் காண முடிந்தது.

தாய்லாந்து மொழியில் வெளியான பதிவுகளை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தபோது ஃபனோம் ரங் கோவில் என்றே அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

எனவே, ஃபனோம் ரங் கோவில் எப்படி இருக்கும், இந்த படமும் ஃபனோம் ரங் கோவில் படமும் ஒத்துப்போகிறதா என்று ஆய்வு செய்தோம். கூகுள் மேப்பில் ஃபனோம் ரங் கோவிலைத் தேடி எடுத்தோம். கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ-வில் பார்த்தோம். அப்போது, இந்த புகைப்படம் ஃபனோம் ரங் கோவில் எடுக்கப்பட்டது என்ற முடிவுக்கு வர முடிந்தது.

அசல் பதிவைக் காண: Google Map I buriram.go.th I Archive

தொடர்ந்து தேடியபோது ஷட்டர் ஸ்டாக் என்ற புகைப்பட விற்பனை செய்யும் தளத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று விற்பனைக்கு இருந்தது. அதிலும் இது ஃபனோம் ரங் கோவில் என்றே குறிப்பிட்டிருந்தனர். அங்கு சூரியன் மறையும் போது இந்த காட்சியை புகைப்படம் எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் தாய்லாந்தின் ஃபனோம் ரங் கோவிலில் சூரிய ஒளி படும் படத்தை எடுத்து கோனார்க் கோவிலில் 200 ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் சூரிய ஒளி நுழையும் காட்சி என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

கோனார்க் கோவில் என்று பகிரப்படும் படம் தாய்லாந்தில் உள்ள ஃபனோம் ரங் கோவில் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஒடிஷா கோனார்க் கோவில் என்று பகிரப்படும் தாய்லாந்து கோவில் படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False