
செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வு விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரக வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வரலாகப் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
செவ்வாய்க் கிரகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “( இவை அனைத்தும் வானத்து மேலே )
🇫🇷🚀ஒரு மணிக்கு 20 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் 7 மாதங்கள் பயணம் செய்து நேற்று முன்தினம் செவ்வாய் கிரகத்தில் கால் வைத்துள்ளது பேர்சேவேரன்ஸ் (Preseverance) என்கின்ற தானியங்கி வாகனம்… இந்த வாகனத்தில் பொருத்தப்பட்ட அதிநுட்ப கேமரா மூலமாக எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் தரைப் பகுதி காணொளியைப் பாருங்கள்…
இந்த அதிநுட்ப கேமராக்களை வடிவமைத்து தயாரித்தது பிரெஞ்சு விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Laya Dharmaraj – லயா தர்மராஜ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 பிப்ரவரி 22ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்காவின் நாகா செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சிவரன்ஸ் என்ற ஆய்வுகலத்தை அனுப்பியிருந்தது. அது கடந்த 2021 பிப்ரவரி 21ம் தேதி செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியது. அதற்கு முன்னதாக பிப்ரவரி 20ம் தேதி பெர்சிவரன்ஸ் கேமராவில் எடுக்கப்பட்ட 360 டிகிரி புகைப்படத்தை நாசா வெளியிட்டிருந்தது. பிப்ரவரி 23ம் தேதிதான் பெர்சிவரன்ஸ் தரையிரங்கும் வீடியோவை நாசா வெளியிட்டிருந்தது. ஆனால், பிப்ரவரி 22ம் தேதியே பெர்சிவரன்ஸ் எடுத்த வீடியோ என்று பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பி வரவே இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோவின் கடைசி ஃபிரேம்களில் க்யூரியாசிட்டி என்று தெரிகிறது. எனவே இது பெர்சிவரன்ஸ் இல்லை என்பது உறுதியாகிறது. இதை மேலும் உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று பார்த்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை பலரும் கடந்த ஆண்டில் இருந்து பகிர்ந்து வருவது தெரிந்தது. இவற்றுக்கு இடையே நாசா வெளியிட்டிருந்த க்யூரியாசிட்டி எடுத்த 1.8 பில்லியன் பிக்சல் பனோரமா காட்சி என்ற பதிவில் நாம் வீடியோவில் பார்த்த காட்சிகள் அனைத்தும் இருப்பதைக் காண முடிந்தது.
மேலும், நாசா வெளியிட்டிருந்த பதிவில் க்யூரியாசிட்டி என்று தெளிவாக எழுதப்பட்டிருந்த பெயர் பலகையும் இருந்தது. இது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோடு ஒத்துப்போனது.
அசல் பதிவைக் காண: mars.nasa.gov I Archive 1 I photojournal.jpl.nasa.gov I Archive 2
குன்று சமவெளி என எல்லாமே க்யூரியாசிட்டி எடுத்த படத்துடன் ஒத்துப்போகிறது. மேலும், ஆய்வுக்கலம் வந்த வழித்தடம் வீடியோவில் உள்ளதற்கும், நாசா வெளியிட்ட க்யூரியாசிட்டி படத்திற்கும் ஒத்துப்போவதை காண முடிகிறது.
மேலும், நாசாவின் பெர்சிவரன்ஸ் மார்ஸ் ரோவர் என்ற ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள வீடியோவை நாசா வெளியிட்டதா என்று தேடினோம். அப்போது, இந்த வீடியோவை நாசா வெளியிடவில்லை என்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில், பெர்சிவரன்ஸ் எடுத்த வீடியோ என்று பகிரப்படுவது க்யூரியாசிட்டி எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் காட்சி என்பது உறுதியாகி உள்ளது.
முடிவு:
செவ்வாய்க் கிரகத்தில் இருந்து க்யூரியாசிட்டி ஆய்வுக்கலம் அனுப்பிய புகைப்படத்தை பெர்சிவரன்ஸ் எடுத்தது என்று தவறாக பகிர்ந்து வருவதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பெர்சிவரன்ஸ் எடுத்த செவ்வாய் கிரக காட்சி புகைப்படம் இதுவா?
Fact Check By: Chendur PandianResult: False
