
ஞானவாபி மசூதி குளத்தில் வெளிப்பட்ட சிவலிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
குளத்தில் இருக்கும் சிவலிங்கம் மற்றும் மசூதியில் தொழுகை தொழுகைக்குத் தயாராக சுத்தம் செய்யும் நபரின் புகைப்படத்தை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Gyanwapi கார்வப்சி மசூதியில் அதன்குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றியதும் அடியில் இருந்த சிவலிங்கம் 12.8 அடி வடிவில் சிவனார் வெளிப்பட்டார். 400 வருடங்களாக அழுக்கு படிந்த கைகளை,கால்களை அந்த குளத்தில் கழுவிட்டு இருந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது! தவறை உணர்ந்து வெளியேறுவது நல்லது!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ஸ்ரீபரந்தாமன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மே 16ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அது லிங்கம் இல்லை, நீரூற்று, எல்லா மசூதியிலும் அப்படி ஒரு அமைப்பு இருக்கும் என்று இந்துக்களின் கூற்றை இஸ்லாமியர்கள் தரப்பு நிராகரிக்கிறது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.
இதற்கிடையே, மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று ஆளாளுக்கு அவரவருக்குப் பிடித்த படங்களை எல்லாம் பகிர்ந்து வருகின்றனர். ஒடிஷாவில் உள்ள சிவலிங்கத்தை முதலில் ஞானவாபி சிவலிங்கம் என்று சமூக ஊடகங்களில் பரப்பினர். அது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
தற்போது, புதிதாக ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று வேறு ஒரு சிவலிங்கம் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கும், ஞானவாபியில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் செயற்கை நீரூற்று அமைப்பு சிவ லிங்கத்துக்கும் தொடர்பே இல்லை. எனவே, இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: alamy.com I Archive
புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இஸ்லாமியர் தொழுகைக்குத் தயாராகச் சுத்தம் செய்துகொள்ளும் புகைப்படம் டெல்லி ஜமா மசூதியில் (Jama Masjid) எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. சிவலிங்கம் புகைப்படத்தை தனியாக ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அது ராஜஸ்தானில் உள்ள கௌமுக் குந்த், சித்தோர்கர் கோட்டையில் உள்ள சிவலிங்கம் என்று தெரியவந்தது. பல இணையதளங்கள், சமூக ஊடகங்களில் இந்த படத்தை பல ஆண்டுகளாக பலரும் பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது.
Archive 1 I moonstudio.data.blog I Archive 2
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிவலிங்கத்தின் படத்தை எடுத்து, ஞானவாபி சிவலிங்கம் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று பகிரப்படும் படம் ராஜஸ்தானில் உள்ளது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஞானவாபி சிவலிங்கம் என்று பகிரப்படும் ராஜஸ்தான் படம்!
Fact Check By: Chendur PandianResult: False
