“நெல் மூட்டைகள் மழையில் சேதம்; விவசாயி சோகம்”- இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?
சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடந்த சூழலில், மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததைக் கண்டு விவசாயி ஒருவர் சோகமாக அமர்ந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்திருக்க, விவசாயி ஒருவர் வேதனையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "கார் ரேஸுக்கு டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலையில் ஆழ்ந்திருக்கும் தமிழக விவசாயி!!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் ஃபார்முலா கார் பந்தயம் எல்லாம் தேவையா என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தமிழ்நாட்டில் நடந்த பழைய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களின் புகைப்படங்களை எல்லாம் கார் பந்தயம் நடந்தபோது எடுக்கப்பட்டது போன்றும், தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் நிலை என்பது போலவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், விவசாயி ஒருவர் மழை நீரில் நனைந்த நெல் மூட்டைகளைக் கண்டு வேதனையில் இருக்கும் புகைப்படத்தை இப்போது எடுக்கப்பட்டது போன்று பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தை 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி விகடன் பதிவிட்டிருந்தது தெரிந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு ஆட்சியில் இருந்த காலம்.
உண்மைப் பதிவைக் காண: vikatan.com I Archive
அந்த செய்தியில், "திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் - விருத்தாசலத்தில் விவசாயிகள் சோகம்!" என்று குறிப்பிட்டிருந்தனர். விகடன் மட்டுமின்றி வேறு ஊடகங்களிலும் இந்த விவசாயி வேதனையுடன் அமர்ந்திருக்கும் வேறு புகைப்படங்களை வைத்து செய்தி வெளியிட்டிருந்தனர்.
இந்த புகைப்படம் 2019ல் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சி, அந்த ஆட்சி என எந்த ஆட்சியிலும் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடவில்லை என்பதையே இந்த புகைப்படம் வெளிப்படுத்துகிறது. விவசாயம் மாநிலத்தின் கட்டுப்பாட்டிலிருந்தாலும் மத்திய அரசுக்கும் அதில் பொறுப்புக்கள் உள்ளன. மாநில அரசும் சேமிப்பு கிடங்குகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 525 சேமிப்பு கிடங்குகள் உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. என்னதான் சேமிப்பு கிடங்கு இருந்தாலும் திடீர் மழை ஏற்படும் போது யாராலும் அதை ஒன்றும் செய்ய முடியாது. இதைப் புரிந்துகொண்டால் இது போன்ற வதந்திகளைப் பரப்ப மாட்டார்கள்.
நம்முடைய ஆய்வில் விவசாயி வேதனையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் 2024ல் எடுக்கப்பட்டது இல்லை, 2019ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது என்பதும், 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெய்த திடீர் மழையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்குக் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் சேதம் அடைந்ததும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2019ம் ஆண்டு விருத்தாசலத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் வேதனை அடைந்த விவசாயியின் புகைப்படத்தை எடுத்து 2024ல் ஃபார்முலா கார் ரேஸ் நடந்த சூழலில் எடுக்கப்பட்டது போல் தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel