குஜராத் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
குஜராத் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலர் உணவு வழங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கழுத்தளவு நீரிலும் கூட உணவுப் பொருட்களை எடுத்து வந்து தேவைப்படுவோருக்கு வழங்குகின்றனர்.
நிலைத் தகவலில், "ஆடையை வைத்து அடையாளம் காணலாம் : தேசபக்தர்கள்ஆமாம் குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதந்து உணவுப் பொருட்களை உதவி செய்யும் இஸ்லாமியர்களை ஆடையை வைத்து அடையாளம் காணுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் மக்கள் படும் கஷ்டங்கள், பாதிப்புகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பலரும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், குஜராத்தில் வெள்ளத்தால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளான மக்களுக்கு இஸ்லாமியர்கள் உணவுப் பொருட்களை வழங்கியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ ஆந்திராவில் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டு சிலர் பதிவிட்டிருந்தனர். எனவே, இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. சற்று தேதி பின்னோக்கி செல்ல செல்ல "Pray for Bangladesh" என்று குறிப்பிட்டு சிலர் இந்த காணொளியைப் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. மேலும் வங்கமொழியில் பலரும் இந்த வீடியோவை ஃபேஸ்புக், எக்ஸ் போஸ்ட், யூடியூப் தளங்களில் பதிவிட்டிருந்தனர். அவை அனைத்திலும் இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ஆடியோ எடிட் செய்து மாற்றப்பட்டிருந்தது. ஆனால் வங்க மொழியில் வெளியான பதிவுகளில் உண்மையான ஆடியோ இருந்தது. அதில் அவர்கள் வங்க மொழியில் பேசுவதை கேட்க முடிந்தது. மேலும், பெயர்ப் பலகை ஒன்றில் வங்க மொழியில் எழுதப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
தொடர்ந்து தேடிய போது வங்கதேச ஊடகங்களிலும் கூட இந்த வீடியோ வந்திருப்பதை காண முடிந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது இல்லை, வங்கதேசத்தைச் சார்ந்தது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
வங்கதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய வீடியோவை எடுத்து, குஜராத்தில் இஸ்லாமியர்கள் உதவி செய்தனர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…