பிரதமர் மோடி முதன்முறையாக கேமராவை பார்க்காமல், அருகில் இருந்த பாடகியை பார்த்துக்கொண்டிருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி அருகில் இருக்கும் பெண் ஒருவரை பார்க்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "கேமராவை பார்க்காத அறிய முதல் புகை படம் ! நமக்கு மணிப்பூரை பார்க்க நேரம் இல்ல!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை Radha Krishan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 21ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவரை அவர் பார்த்துக்கொண்டிருப்பது போன்று புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் காமிராவை பார்த்து போஸ் கொடுப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதன் முறையாக கேமராவை பார்க்காமல் அருகில் இருந்த பெண்ணை பார்க்கிறார் என்பது போன்று கருத்தை பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மோடி அருகில் இருப்பது காலி நாற்காலி என்றும், அந்த பெண்மணி புகைப்படத்தை எடிட் செய்து வைத்திருப்பதும் தெரியவந்தது. 2020ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் இதன் உண்மையான படத்தை பலரும் பகிர்ந்திருந்தனர். அதில் மோடி அருகில் காலியாக இருக்கும் நாற்காலியை பார்ப்பது போல உள்ளது.

உண்மைப் பதிவைக் காண: mirror.co.uk I Archive

தொடர்ந்து தேடிய போது, படத்தில் இருக்கும் பெண் வேறு ஒரு நிகழ்ச்சியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. படத்தில் இருப்பவர் பாடகி ரிஹானா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் 2017ம் ஆண்டு சிறந்த மனிதாபிமானி (Humanitarian) விருது கொடுக்கப்பட்ட நிகழ்ச்சியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2017ம் ஆண்டு பாடகி ரிஹானா விருது பெற்றபோது எடுத்த படத்தை, பிரதமர் மோடி அருகில் காலி இருக்கை இருக்கும் புகைப்படத்துடன் எடிட் செய்து ஒன்று சேர்த்து, கேமராவை பார்க்காமல் பெண்ணை பார்க்கும் மோடி என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.

முடிவு:

மோடி தன் அருகில் இருந்த பாடகியை பார்த்துக்கொண்டிருந்தார் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நரேந்திர மோடி கேமராவை பார்க்காத முதல் அரிய புகைப்படம் என்று பரவும் படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered