தமிழக கோவிலின் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும் என்றும் மொழியில் இருந்து பழக்க வழக்கம் வரை மாறுதல் தேவை என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாக போலி நியூஸ் கார்டுகள் வைரலாக பரவி வருகின்றன.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட முதல் நியூஸ் கார்டில், "கோவையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பரப்புரை. மொழியிலிருந்து பழக்க வழக்கங்கள் வரை மாறுதல் தேவை. தமிழர்களுக்குத் தீவிரமாக ஹிந்து கலாச்சாரத்தைப் பயிற்றுவிக்க வேண்டும்" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை Thenmozhi Das என்பவர் 2021 மார்ச் 31 அன்று பதிவிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இரண்டாவது நியூஸ் கார்டில், "கோவில்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகக் கோவில்களில் ரயில் நிலையத்தைப் போல அனைவரும் வந்து போவதைக் காண முடிகிறது" என்று இருந்தது.

நிலைத் தகவலில், "இப்போதான் வெளிய வருது ... நாத்தம்... , ஏன் கோயில பக்தாஸ் கிட்ட குடு... பக்தாஸ் கிட்ட குடுண்ணு கதற்ராய்ங்கன்னு ...! எப்பிடி உள்ள வந்து கட்டையப் போட்டான் பாருங்க பக்தாஸ். எல்லாரும் கோயிலுக்கு உள்ள வரக்கூடாதாமே.. பக்தாஸ்.! புனிதத் தன்மைன்னா, ஒரு ஆள் உள்ள வந்திட்டு போனதும் தீட்டுன்னு ஜலத்த விட்டு அலம்பி விடரதுதான் பக்தாஸ்..!??? இல்ல, ஆளையே உள்ள வர விடாம , வெளியவே நிறுத்தி வைக்கிறதா பக்தாஸ்...!??? நமது சின்னம் - தாமரை, ரெட்டை இலை, மாங்கனி" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Murugesh IP என்பவர் 2021 மார்ச் 31 அன்று பதிவிட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் வானதி ஶ்ரீனிவாசனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. அதில் தி.மு.க பெண்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று எல்லாம் பேசியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ளது போன்று யோகி ஆதித்யநாத் கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை.

எனவே, நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு செய்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எதுவும் இல்லை.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive

யோகி ஆதித்யநாத் தமிழக கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் பற்றியே, மொழி, கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்று பேசியதாக எந்த செய்தியும் கிடைக்காத சூழலில், நியூஸ் 7 தமிழில் அப்படி ஒரு நியூஸ் கார்டு வெளியாகாத நிலையில் இவை இரண்டும் போலியானவை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதை மேலும் உறுதி செய்துகொள்ள நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்புகொண்டு கேட்டோம். போலி என்பதை உறுதி செய்த அவர், ‘’இதுபற்றி நாங்கள் ஏற்கனவே போலி என்று கூறி எங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளோம்,’’ என்றார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

குறிப்பிட்ட இரண்டு நியூஸ் கார்டுகளும் போலியானவை என்பதைக் குறிக்கும் வகையில் "FAKE" என்று முத்திரை குத்தி, நியூஸ்7 தமிழ் ஊடகமே பதிவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த இரண்டு நியூஸ் கார்டுகளும் போலியானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.

முடிவு:

தமிழ் மொழி, கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும் என்றும் தமிழக கோவில்களில் பலரும் வந்து செல்வதை தடுத்து புனிதத் தன்மை காக்கப்பட வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:FACT CHECK: மொழி மற்றும் தமிழக கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பற்றி யோகி ஆதித்யநாத் பேசியதாக பரவும் வதந்திகள்!

Fact Check By: Chendur Pandian

Result: False