வங்கதேசத்தில் புர்கா அணியாத இந்து பெண்ணை தாக்கும் இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Update: 2024-09-14 12:29 GMT

ங்கதேசத்தில் பொது வெளியில் புர்கா அணியாமல் வந்த இந்து பெண்ணை இஸ்லாமியர் ஒருவர் அடித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நீல நிற டி-ஷர்ட் அணிந்த நபர் ஒருவர் கையில் பச்சை நிற பைப்பை எடுத்துச் சென்று, பெண்களை விரட்டி விரட்டி தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இஸ்லாமிய வெறியர்கள் கைப்பற்றிய பங்களாதேஷில் உள்ள ஒரு நகரத்திலிருந்து ஒரு பரிதாபகரமான காட்சி. ஒரு வெறியர் நகரம் முழுவதும் ஓடி, புர்கா அணியாமல் நடந்து செல்லும் இந்து பெண்களை அடிக்கிறார். இதை யாரும் எதிர்க்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு இவ்வளவு செய்த பிறகும் கூட, அருகில் நிற்கும் ஒரு நபர் கூட இந்த ஜிகாதிக்கு எதிராக எதிர்வினையாற்றவில்லை! ஜிகாதிகள் பெரும்பான்மையாக மாறிவரும் நம் நாட்டில் எதிர்காலத்தில் இவை அனைத்தையும் எதிர்பார்க்கலாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்ட மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தீவிர இஸ்லாமியர்கள் நாட்டைக் கைப்பற்றி இந்துக்களைத் தாக்கி வருவதாக தொடர்ந்து இந்தியாவில் தவறான தகவல், வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பொது வெளியில் இந்து பெண் ஒருவர் புர்கா அணியவில்லை என்பதால் தாக்கப்பட்டதாக தற்போது புதிய வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். நீண்ட தேடலுக்குப் பிறகு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சியுடன் வெளியான வங்கதேச ஊடக செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், "டாக்காவில் செக்ஸ் பணியாளர்கள் மீது தாக்குதல்" என்று தலைப்பிடப்பட்டிருந்தது. HM Rasel sultan என்ற நபர் பல பெண்களைப் பச்சை நிற பைப் மூலம் தாக்கினார். டாக்காவில் பாலியல் தொழிலைத் தடுத்து நிறுத்த இது ஒன்றுதான் வழி என்று அந்த நபர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பாலியல் தொழிலாளர்களைத் தாக்கிய HM Rasel sultan தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்ததாகவும் அது தற்போது வைரல் ஆகி உள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் 2024 ஆகஸ்ட் 29ம் தேதி நடந்ததாகவும் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட பெண் பாலியல் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


உண்மைப் பதிவைக் காண: dhakatribune.com I Archive 1 I prothomalo.com I Archive 2 I awaazbd.us I Archive 3

HM Rasel sultan என்ற நபரின் ஃபேஸ்புக் பக்கத்தை கண்டறிந்தோம். ஆனால், சர்ச்சைக்குரிய வீடியோவை அந்த நபர் அகற்றியிருந்தது தெரிந்தது. தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் பேட்டியை மற்றொரு ஊடகம் வெளியிட்டிருந்தது. அந்த பெண்ணின் பெயர் ஷாஹிதா (வயது 50) என்று குறிப்பிட்டிருந்தனர். முன்னாள் பாலியல் தொழிலாளியான அவர் தற்போது, ஹெச்ஐவி தடுப்பு மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கான சிகிச்சை சேவைகள் குறித்த "அஹ்சானியா" என்ற சமூகசேவை திட்டத்தின் கள அதிகாரியாக பணிபுரிகிறார். ஆகஸ்ட் 29 அன்று டாக்காவில் உள்ள ஷியமோலி பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தாக்குதல் பற்றி அந்த பெண் கூறுகையில், "பாலியல் தொழிலாளர்களுக்கு ஆணுறைகளை விநியோகித்துவிட்டு, நோய் தடுப்பு, சிகிச்சை முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என் பணி. வழக்கம் போல பாலியல் தொழிலாளர்களுக்கு ஆணுறை அளித்த பிறகு, நான் ஒரு மொபைல் ரீசார்ஜ் பாயின்ட்டின் முன் நின்று கொண்டிருந்தேன். அப்போது நீல நிற டி-ஷர்ட் மற்றும் முகமூடி அணிந்த ஒரு நபர் திடீரென்று பச்சை நிற பைப்புடன் வந்து என்னை அடிக்கத் தொடங்கினார். 


உண்மைப் பதிவைக் காண: instagram.com I thedailystar.net I Archive

நான் ஒரு பாலியல் தொழிலாளி என்று தவறாகக் கருதி, வாடிக்கையாளருக்காக காத்திருக்கிறேன் என்று அவர் தவறாக நினைத்திருக்கலாம். அவரிடம் நான் ஒரு சமூக சேவகி என்று கூறி என்னுடைய அடையாள அட்டையைக் காட்டினேன். ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளாமல் என்னை தாக்கினார். ஏன் பாலியல் தொழிலாளர்களுடன் பேசுகிறாய் என்று கேட்டு என்னை அடித்தார். அடிப்பதை நிறுத்தும்படி கெஞ்சிக் கெட்டேன். ஆனாலும் அவர் கேட்கவில்லை. யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை" என்று கூறினார்.

வங்கதேசத்தில் பாலியல் தொழிலாளர்களை ஒருவர் தாக்கிய வீடியோவை எடுத்து, புர்கா அணியாத இந்துக்களை தாக்கியதாக தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வங்கதேசத்தில் ஒருவர் பாலியல் தொழிலாளர்களை தாக்கிய வீடியோவை எடுத்து இந்து பெண்கள் புர்கா அணியாததால் தாக்கப்பட்டனர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel


Claim :  வங்கதேசத்தில் புர்கா அணியாமல் வந்த இந்து பெண்ணை இஸ்லாமியர் ஒருவர் அடித்தார் என்று ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
Claimed By :  Social Media Users
Fact Check :  -
Tags:    

Similar News