தங்கலான் படம் சரியில்லை என்பதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் டிக்கெட் பணத்தை திரும்ப கேட்டதாதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive

தந்தி டிவி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், "தங்கலான் பார்த்த ரசிகர்கள் ஆத்திரம்.. டிக்கெட்டை திரும்ப கேட்டு வாக்குவாதம். படம் பாதியில் நிறுத்தப்பட்டு பணத்தை திரும்ப வழங்கிய திரையரங்கு நிர்வாகம்" என்று இருந்தது.

நிலைத் தகவலில், "தங்கலான் சொதப்பல்! உண்மையைச் சொன்னால், பல பேருக்கு வலிக்கும்... படத்துல கதை புரிய வேண்டாமா?மக்களுக்கு.. பா ரஞ்சித், ஜாதி பெறுமை பேசி கோட்டை விட்ட தங்கலான்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே ஸ்கிரீன்ஷாட்டுடன் தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் காட்சியின் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "எப்புடியாவது ஆஸ்கர் குடுங்கமா" என்று விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கேட்பது போன்று பதிவை உருவாக்கியுள்ளனர். இதையும் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் நன்றாக இல்லை என்பது போன்று தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர். தற்போது ரசிகர்கள் திரைப்படம் சரியில்லை என்று டிக்கெட் கட்டணத்தைத் திரும்பக் கேட்டு போராட்டம் செய்தது போன்று பதிவிட்டு வருகின்றனர்.

தந்தி டிவி இந்த செய்தியை வெளியிட்டதா என்று அறிய அதன் இணையதளத்திற்கு சென்று பார்த்தோம். அப்போது, "'தங்கலான்' பார்த்த ரசிகர்கள் ஆத்திரம்.. டிக்கெட்டை திரும்பக் கேட்டு வாக்குவாதம்" என்று தலைப்பிட்டு தந்தி டிவி செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது. இந்த தலைப்பை வைத்துப் பார்க்கும் போது படம் சரியில்லை என்பதால் ரசிகர்கள் போராட்டம் செய்தார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

Archive

ஆனால், அந்த வீடியோ செய்தியில் அப்படி இல்லை. அந்த செய்தியில், "தூத்துக்குடியில் தங்கலான் திரையிடப்பட்ட திரையரங்கில் ஆடியோ சரியாக கேட்கவில்லை என்று கூறி திரையரங்கை விட்டு வெளியே வந்து ரசிகர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது" என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் அந்த செய்தியில், "தூத்துக்குடியில் சீரமைத்து புதிதாக திறக்கப்பட்ட கிளியோபாட்ரா திரையரங்கில் தங்கலான் திரைப்படம் வெளியானது. படத்தை பார்க்க ரசிகர்கள், பொது மக்கள் என்று அரங்கம் நிறைந்திருந்தது. படம் திரையிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆடியோ சரியாக கேட்கவில்லை என்று பிரச்னை எழுந்தது. இது தொடர்பாக திரையரங்கு நிர்வாகிகளிடம் கேட்டபோதும் அவர்கள் முறையான பதில் அளிக்காததால் ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர் காலை காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கினார். உடன் ரசிகர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு திரையரங்கை விட்டு வெளியேறினர்" என்று கூறப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: kamadenu.in I Archive

தந்தி டிவி மட்டுமின்றி எல்லா ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகி உள்ளது. பெரும்பாலானவர்கள் ஏதோ படம் சரியில்லை என்று ரசிகர்கள் போராட்டம் நடத்தியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தலைப்பு வைத்திருந்தார்கள். வாசகர்களை ஈர்க்க ஊடகங்கள் இப்படி தலைப்பு வைப்பது இயல்பானதுதான். ஆனால், அதை வதந்தி பரப்பும் பிறவிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பதவியை பரப்பியுள்ளனர். இதன் மூலம் திரைப்படம் சரியாக இல்லை, நன்றாக இல்லை என்ற காரணத்திற்காக ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது தெளிவாகிறது.

தவறான தகவலை வெளியிட்டிருப்பதாக நாம் ஆய்வுக்கு எடுத்தக்கொண்ட பதிவரை பலரும் கமெண்டில் விமர்சித்துள்ளனர். ஆனாலும் பதிவை நீக்கி தனது தவறை திருத்திக்கொள்ள அவர் தயாராக இல்லை. தங்கலான் படம் தொடர்பாக தந்தி டிவி வெளியிட்டிருந்த செய்தியை பார்த்திருந்தால் இப்படி தவறான பதிவை வெளியிட்டிருக்க மாட்டார்கள். வதந்தி பரப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பதிவை உருவாக்கி வெளியிட்டிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. செய்தியை முழுமையாக சொல்லாமல் தங்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் வைத்து தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பாதி உண்மையை மட்டும் வெளியிட்டிருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தியேட்டரில் ஆடியோ சரியில்லை என்பதால் தங்கலான் திரைப்படத்திற்கு வாங்கிய டிக்கெட்டிற்கான கட்டணத்தை ரசிகர்கள் திரும்பி கேட்ட விவகாரத்தை படம் சரியில்லை என்பதால் ரசிகர்கள் வாக்குவாதம் என்பது போல் தவறான அர்த்தம் வரும் வகையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தங்கலான் படம் சரியில்லை என்று பணத்தை திரும்பிக் கேட்டு ரசிகர்கள் வாக்குவாதம் செய்தனரா?

Written By: Chendur Pandian

Result: False