குஜராத் வெள்ளத்தில் முதலைகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
குஜராத் மழை வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்த முதலைகள் என்று சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது!
குஜராத் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலைகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
முதலைகள் கூட்டமாக நீந்தும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "குஜராத்தில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ள முதலைகள் ஹாயாக நடைப்பயிற்சி மேற்கொள்கின்றன..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குஜராத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் வதோதரா உள்ளிட்ட நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. மேலும் ஆற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட ஏராளமான முதலைகள் நகரங்களில் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களிலிருந்து மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த சூழலில் குஜராத் வெள்ளத்தில் நீந்தும் முதலைகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது பல ஊடகங்களும் இந்த வீடியோவை தங்கள் செய்திகளில் பயன்படுத்தி இருந்ததைக் காண முடிந்தது. எனவே, இந்த வீடியோ உண்மையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த வீடியோவை யார் எடுத்தது என்ற விவரத்தை வெளியிடவில்லை. சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தனர். சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாலேயே இது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் இது குஜராத்தில் மக்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த கட்டிடத்தையும் வீடியோவில் காணவில்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வைத் தொடர்ந்தோம்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
தொடர்ந்து தேடிய போது குஜராத் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னதாகவே இந்த வீடியோவை சிலர் தங்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. முதலைகள் பாதுகாப்பு தொடர்பான ஃபேஸ்புக் பக்கம் இன்றில் இந்த வீடியோ ஆகஸ்ட் 22, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் இந்த வீடியோ கிம்பர்லியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கிம்பர்லி என்பது தென்னாப்பிரிக்காவில் உள்ள இடமாகும். மேலும் அந்த பதிவில் டோனி இம்பர்லாங் (Donny Imberlong) என்பவரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கிம்பர்லி முதலைகளின் நடனம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
Donny Imberlong இம்பர்லாங் என்ற பெயரில் யாராவது சமூக ஊடகங்களில் உள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம். அப்போது அந்த பெயரில் ஃபேஸ்புக்கில் ஒரு அக்கவுண்ட் இருப்பதைக் கண்டறிந்தோம். ஆகஸ்ட் 7, 2024 அன்று அவர் இந்த வீடியோவை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் கண்டறிந்தோம். அதில் முதலை குட்டிகள் தங்கள் உணவுக்காக சண்டையிட்டுக்கொண்ட வீடியோ என்று குறிப்பிட்டிருந்தார். இது மட்டுமின்றி இதே போன்று ஏராளமான முதலைகள் நீந்தும் வீடியோவை அவர் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் இந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட முதலைகள் வீடியோவை குஜராத் வெள்ளத்தில் ஊருக்குள் நீந்தும் முதலைகள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…