கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நடந்த மெழுகுவர்த்தி போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "கொல்கத்தா நகரில் மெழுகுவர்த்தியுடன் ஆயிரக் கணக்கில் திரண்ட பெண்கள்.பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவிக்கு நீதி வேண்டி தேசியக் கொடியுடன் கொல்கத்தா உட்பட மேற்கு வங்க மாநிலத்தின் பிற பகுதிகளிலும் சாலைகளில் நள்ளிரவில் பெருமளவு திரண்ட பெண்கள்.

இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு கொல்கத்தா நகரில் அனைத்து வீடுகளிலும் விளக்குகளை அணைத்து வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மற்ற நகரங்களை விட கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்றனர். மேற்கு வங்க ஆளுநர் சி ஏ ஆனந்த் போஸ் தனது மாளிகையிலும் விளக்குகளை அணைத்து மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கொல்கத்தாவில் பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி இரவில் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.



வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பலரும் கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டம் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. சற்று பின்னோக்கி சென்று பார்த்த போது இந்த வீடியோவை ஆகஸ்ட் 9, 2024 அன்று சிலர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.


உண்மைப் பதிவைக் காண: instagram.com

அதில், "Candle lights in Uttara 🕯️✨ A Tribute to the Martyrs, We love you" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "உத்தராவில் மெழுகுவர்த்தி ஏந்தி தியாகிகளுக்கு அஞ்சலி" என்ற அர்த்தத்தில் பதிவிடப்பட்டிருந்தது. உத்தரா என்று ஏதேனும் இடம் எங்கு உள்ளது என்று பார்த்தபோது வங்கதேச தலைநகர் டாக்காவில் அப்படி ஒரு இடம் இருப்பது தெரிந்தது.


இதன் அடிப்படையில் தேடிய போது, ஆகஸ்ட் 9ம் தேதி மெழுகுவர்த்தியுடன் ஏராளமானோர் நிகழ்ச்சி நடத்தியதாக செய்திகள் நமக்குக் கிடைத்தன. வங்கதேச ஊடகங்களில் 9ம் தேதி நடந்த மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக வெளியான செய்திகளும் நமக்குக் கிடைத்தன.


நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த வீடியோ முதலில் ஆகஸ்ட் 9, 2024 அன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவம் நடந்ததும் அதே 9ம் தேதிதான். இவை எல்லாம் இந்த வீடியோ கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதிகேட்டு நடந்த போராட்டத்தின் வீடியோ இல்லை என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு மெழுகுவர்த்தி போராடிய பெண்கள் என்று பரவும் வீடியோ வங்கதேசத்தைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channelகொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நடந்த மெழுகுவர்த்தி போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.