சந்திர மண்டலமாக மாறிய குமரி மாவட்ட சாலைகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Update: 2024-10-09 08:07 GMT


குமரி மாவட்டத்தின் சாலைகள் குண்டும் குழியுமாக சந்திரமண்டலம் போல இருப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

குண்டும் குழியுமாக உள்ள ஏராளமான சாலைகளின் புகைப்படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் செய்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "#சந்திரமண்டலமாக மாறிய #குமரி மாவட்ட சாலைகள்......" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குமரி மாவட்ட சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. பல புகைப்படங்களை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் எந்த எந்த இடங்களில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. இந்த புகைப்படம் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.


உண்மைப் பதிவைக் காண: Facebook

முதலில் இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடிப் பார்த்தோம். 2020ம் ஆண்டிலிருந்தே இந்த புகைப்படத்தை இந்தியாவின் பல பகுதிகளின் நகரங்களின் பெயரை குறிப்பிட்டு பலரும் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. தெலுங்கு தேசம் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் 2020ம் ஆண்டு இந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.


Archive

ஜோத்பூர் என்று கடந்த செப்டம்பரில் கூட இதை சிலர் பதிவிட்டிருந்தனர். இப்படி, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா என பல மாநிலத்தவர்களும் இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு தங்கள் மாநில முதலமைச்சர்களை டேக் செய்திருந்ததை காண முடிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் கன்னியாகுமரியைச் சார்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்தது.


உண்மைப் பதிவைக் காண: spokesman.com I Archive

இதை உறுதிசெய்துகொள்ள இந்த தொகுப்பில் உள்ள புகைப்படங்களை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முதல் புகைப்படத்தை மட்டும் தனியாக வெட்டி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் 2017ம் ஆண்டில் ஒரு செய்தி ஊடகத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள Spokane என்ற பகுதியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


உண்மைப் பதிவைக் காண: saltwire.com I Archive

இரண்டாவது புகைப்படத்தை கூகுள் லென்ஸில் பதிவேற்றி தேடினோம். 2019ம் ஆண்டிலிருந்து அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. சரியாக எந்த இடம் என்று கூற முடியவில்லை. இருப்பினும் கனடா நாட்டில் உள்ள நோவா ஸ்கோசியா (Nova Scotia) மாகாணத்தில் எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி நமக்குக் கிடைத்தது.


உண்மைப் பதிவைக் காண: chicagoreader.com I Archive

மூன்றாவது புகைப்படத்தை கூகுள் லென்ஸில் பதிவேற்றித் தேடினோம். அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாலை பள்ளங்கள் என்று 2014ம் ஆண்டு வெளியான செய்தியில் அந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. இதுவும் கன்னியாகுமரி சாலை இல்லை என்பது இதன் மூலம் உறுதியானது.


உண்மைப் பதிவைக் காண: russian-bazaar.com I Archive

நான்காவது புகைப்படம் அமெரிக்காவின் மான்ஹாட்டனில் எடுக்கப்பட்டது என்று ரஷ்ய ஊடகம் ஒன்றில் வெளியான பதிவு கிடைத்தது. 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த செய்தியை அந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. இதன் மூலம் இதுவும் கன்னியாகுமரி சாலை இல்லை என்பது தெளிவானது.


உண்மைப் பதிவைக் காண: morebikes.co.uk I Archive

அடுத்ததாக வரிசையாக வில்லா வீடுகள் உள்ள சாலை முழுக்க பள்ளங்கள் இருக்கும் புகைப்படத்தைப் பற்றித் தேடிப் பார்த்தோம். இங்கிலாந்தில் உள்ள சாலை பள்ளங்கள் என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை 2019ம் ஆண்டில் இங்கிலாந்து ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது தெரியவந்தது. அந்த ஊடகம் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து வதந்தி பரப்பியிருப்பது தெளிவானது.


உண்மைப் பதிவைக் காண: theguardian.com I Archive

பள்ளங்கள் நிறைந்த சாலையின் ஓரத்தில் மக்கள் நடமாடும் பகுதியில் கார் ஒன்று செல்லும் புகைப்படத்தை தேடிப் பார்த்தோம். அது மும்பையில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. 2018ம் ஆண்டு அந்த புகைப்படத்தை ஊடகம் ஒன்று பயன்படுத்தியிருந்தது. அதில் இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்தின் புகைப்பட கலைஞர் அந்த புகைப்படத்தை எடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.


உண்மைப் பதிவைக் காண: sundayguardianlive.com I Archive

பள்ளங்கள் நிறைந்த சாலையில் ஸ்கூட்டி வண்டியை ஒருவர் ஓட்டி வரும் புகைப்படம் 2012ம் ஆண்டில் மும்பையின் மோசமான சாலை என்று குறிப்பிட்டு வெளியான செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது. இந்த புகைப்படத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்று தெளிவான விவரம் அதில் இல்லை.


உண்மைப் பதிவைக் காண: thegazette.com I Archive

சாலை சிக்னல் அருகே உள்ள பள்ளத்தின் புகைப்படத்தை கூகுளில் தேடிப் பார்த்தோம். நீண்ட தேடலுக்குப் பிறகு அதுவும் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாக செய்தி கிடைத்தது. 2019ம் ஆண்டு அமெரிக்காவின் Iowa City-ல் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்படி எல்லா புகைப்படங்களும் வெளிநாடு அல்லது வெளிமாநிலத்தைச் சார்ந்ததாக இருப்பதை நம்முடைய ஆய்வு உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் மோசமான நிலையில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட சாலைகள் என்று பரவும் புகைப்படம் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்தியாவின் மும்பை உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட சாலை பள்ளங்கள் புகைப்படங்களை தொகுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மோசமான நிலையில் உள்ள சாலைகள் என்று தவறான தகவலை பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Claim :  குமரி மாவட்டத்தின் சாலைகள் குண்டும் குழியுமாக சந்திரமண்டலம் போல இருப்பதாக பரவும் புகைப்படம் உண்மையா?
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE
Tags:    

Similar News