வெளிநாட்டில் சமையல் வேலை பார்க்கும் நடிகை ஜெயஶ்ரீ- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம்

1980-களின் தமிழ் திரைப்பட கதாநாயகி ஜெயஶ்ரீ தற்போது வெளிநாட்டில் சமையல் வேலை செய்கிறார் என்று ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. மேலும் நடிகை ஜெயஶ்ரீ என்று வேறு ஒருவர் படம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Jaya Shree 2.png
Facebook LinkArchived Link 1Article LinkArchived Link 2

tamilanmedia.in என்ற இணைய ஊடகத்தின் செய்தி லிங்கை பகிர்ந்துள்ளனர். அதில், “வெளிநாட்டில் சமையல் வேலை பார்க்கும் பிரபல நடிகை. எப்படி இருந்தவர் இப்படி ஆயுட்டாரே? தற்போதைய நிலையை நீங்களே பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, VJ Laya ஃபேஸ்புக் ஐடி பக்கத்தில் 2020 ஜனவரி 10ம் தேதி வெளியிட்டுள்ளனர். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகை ஜெயஶ்ரீ வாழ வழியின்றி வெளிநாட்டில் சமையல் வேலை செய்வது போன்று தலைப்பிட்டுள்ளனர். மேலும், நடிகை ஜெயஶ்ரீ என்று ஒருவர் படத்தை வட்டமிட்டுக் காட்டியுள்ளனர். உண்மையில் யார் ஜெயஶ்ரீ, அவர் வெளிநாட்டில் சமையல் வேலை செய்து வருகிறாரா என்று பார்த்தோம்.

முதலில் செய்தியின் உள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தோம். குழப்பமாக எழுதியிருந்தனர்… அது பற்றி நாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்பதால் செய்தியை மட்டும் பார்த்தோம். அதில், “சினிமாவில் இருந்தபோதே திருமணமாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். கணவன், மகன்கள் என வாழ்ந்து வரும் இவர், அமெரிக்காவில் ஆதரவற்ற மக்களுக்காக அரசு நடித்தி (நடத்தி) வரும் காப்பகத்தில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறாராம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Jaya Shree 3.png

மேலும், “நேரம் கிடைக்கும்போது அவரது மூத்த மகனும் சமலில் தெரிந்த விஷயங்களை செய்து கொடுப்பாராம்” என்று இருந்தது. அமெரிக்காவில் அவர் சமையல் செய்கிறார் என்று எதையும் குறிப்பிடாமல் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். தலைப்பு, தன்னார்வலர் என்ற செய்தியை வைத்து நாமே செய்தியை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ… இது தெரியாமல் பலரும் நடிகை ஜெயஶ்ரீக்காக வருந்துவதும், சிலர் தவறான தலைப்பு மற்றும் செய்திக்காக திட்டுவதும் தெரிந்தது.

Jaya Shree 4.png

சரி பரபரப்புக்கு, வாசகர்களை கவர என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், அந்த தகவல் உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம். அவரது வாழ்க்கை, வேலை தொடர்பாக செய்தி ஏதும் கிடைக்கிறதா என்று தேடியபோது, behindwoods.com என்ற இணைய ஊடகத்தில் ஜெயஶ்ரீ தொடர்பாக வெளியான செய்தி கிடைத்தது.

அதில், பிரான்சை சார்ந்த முன்னணி வங்கி ஒன்றின் அமெரிக்க கிளையில் உயர் அதிகாரியாக ஜெயஶ்ரீ பணியாற்றி வருவதாக குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து நம்முடைய தேடலில், ஜெயஶ்ரீ உணவு தயாரிக்கும் தகவலை முதலில் விகடன் இணையதளம் வெளியிட்டிருந்தது தெரிந்தது.

விகடன் செய்தியில், “ தென்றலே என்னைத் தொடு, விடிஞ்சா கல்யாணம் உட்பட பல வெற்றிப் படங்களின் நாயகி, ஜெயஶ்ரீ. 80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. திருமணமாகி 30 ஆண்டுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்துவருகிறார். அந்த நாட்டில் எம்.எஸ் டிகிரி முடித்தவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். தற்போது புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்துவருகிறார். ஆதரவற்ற மக்களுக்காக அமெரிக்க அரசு நடத்திவரும் காப்பகத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும் பலரும் தன்னார்வலராகப் பணியாற்றுகிறார்கள். 

Jaya Shree 5.png
behindwoods.comArchived Link 1
cinema.vikatan.comArchived Link 2

இவர்களால், தனியார் நட்சத்திர உணவகத்துக்கு இணையான தரத்தில் அந்தக் காப்பகத்தில் உணவு சமைத்து அன்புடன் பரிமாறப்படுவது கூடுதல் சிறப்பு. பல ஆண்டுகளாக ஜெயஶ்ரீயும் அங்கு தன்னார்வலராகப் பணியாற்றுகிறார்” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தியை எடுத்து, சுருக்கி தவறான தலைப்பு வைத்து tamilanmedia.in வெளியிட்டிருப்பது தெரிந்தது. விகடனில் வெளியான அதே படத்தைத்தான் tamilanmedia.in தளமும் பயன்படுத்தியிருந்தது.

பழைய நடிகை என்பதால் பலருக்கும் ஜெயஶ்ரீ யார் என்று தெரியாது. tamilanmedia.in வெளியிட்டிருந்த செய்தியில் சிவப்பு நிற டிஷர்ட் அணிந்திருந்த நபரை வட்டமிட்டு காட்டி ஜெயஶ்ரீ என்று குறிப்பிட்டிருந்தனர். விகடனில், தனிப் படத்தில் ஜெயஶ்ரீ சமைப்பதை வெளியிட்டிருந்தனர். இதன் மூலம், செல்ஃபி எடுத்தவர்தான் ஜெயஶ்ரீ. tamilanmedia.in தவறுதலாக சிவப்பு நிற டிஷர்ட் அணிந்த நபரை ஜெயஶ்ரீ என்று சுட்டிக்காட்டியிருப்பது தெரிந்தது.

நம்முடைய ஆய்வில், நடிகை ஜெயஶ்ரீ அமெரிக்காவில் சமையல் வேலை செய்யவில்லை, ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக செய்திகள் கிடைத்துள்ளது. 

நடிகை ஜெயஶ்ரீ என்று சுட்டிக்காட்டப்பட்ட நபர் ஜெயஶ்ரீ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்தும் மறைத்தும் பகிரப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வெளிநாட்டில் சமையல் வேலை பார்க்கும் நடிகை ஜெயஶ்ரீ- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False