Assam politician video being shared as neet aspirant

ஆங்கிலத்தில் பேசத் திணறும் அரசியல்வாதியின் வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று சமூக ஊடகங்களில் பலரும் பரப்பி வருகின்றனர்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

ஆங்கிலத்தில் பேசத் திணறும் இளைஞர் ஒருவரின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். வீடியோவிலேயே "வடக்கன்ஸ். நீட் தேர்வில் பாஸ் ஆன உடன் எடுத்த பேட்டி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "நீட் தேர்வில் இவன் தேர்ச்சி!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோவில் நிஜத்தின் நிழல் என்ற லோகோ உள்ளது. இந்த வீடியோவை Pandian Pandian என்பவர் 2020 செப்டம்பர் 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோ மிக சிறிய அளவில் எடிட் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. பிக்காஸ், பிக்காஸ் என்று அவர் திணறும் காட்சியை மட்டும் வழங்கியுள்ளனர். நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளனர். 2020ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும்போது இவர் எந்த ஆண்டு வெற்றி பெற்றவர் என்ற கேள்வி எழுந்தது. எனவே, இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நீண்ட தேடுதலுக்குப் பிறகு நமக்கு அசல் வீடியோ கிடைத்தது. சுகூர் அலியின் ஆங்கிலம் என்று பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வந்திருப்பதைக் காண முடிந்தது. இவரது பேட்டியை அஸ்ஸாம் மொழி ஊடகம் நேரடியாக ஒளிபரப்பு செய்ததும் தெரியவந்தது.

pratibimbalive என்ற அந்த தொலைக்காட்சியின் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. 2020 ஜூலை 26ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்த அந்த பதிவை, மொழிபெயர்ப்பு செய்து பார்த்தபோது, "சுகூர் அலியை நினைவிருக்கிறதா? மக்களவைத் தேர்தலில் துப்ரி தொகுதியில் போட்டியிட்ட சுகூர் அலி. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வந்து ஆங்கிலத்தில் பா.ஜ.க-வை திட்டினார்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archived Link

இதே வீடியோவை The North-Eastern Chronicle என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஆங்கிலத்தில் நிலைத்தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. அதில், அஸ்ஸாம் மாநிலத்தின் கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க-வைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை மிகக் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Archived Link

யார் இந்த சுகூர் அலி என்று தேடிய போது அஸ்ஸாமைச் சேர்ந்த காமெடி அரசியல்வாதி என்பது தெரியவந்தது. அவரது ஆங்கில பேச்சு (உளறல்) சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதும், அவரைப் பற்றி நியூஸ் 18 நார்த் ஈஸ்ட் உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் கூட செய்தி வெளியிட்டிருப்பதும் தெரியவந்தது.

Youtube Linkassam.news18.comArchived Link

இவர் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அஸ்ஸாமின் துப்ரி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளார். தேர்தலில் போட்டியிட பணம் அதிக அளவில் தேவை என்பதால் தன்னுடைய உறுப்புக்களை விற்கத் தயார் என்று அறிவித்து கவனத்தை ஈர்த்தவர். அதன்பிறகு அவருக்கு அதிக அளவில் நிதி குவிந்ததாகவும், அதனால் உடல் உறுப்பை விற்கும் முடிவை ஒத்திவைப்பதாகவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அந்த தேர்தலில் அவர் 7774 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

aninews.inArchived Link

நம்முடைய ஆய்வில்,

வீடியோவில் இருப்பது சுகூர் அலி என்ற அஸ்ஸாம் அரசியல்வாதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சுகூர் அலி கடந்த 2020 ஜூலை மாதம் நிவாரண உதவி வழங்க வந்த போது எடுத்தது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

வீடியோவில் இருப்பது நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் இல்லை, அவர் நீட் தேர்வு தொடர்பாக பேட்டி அளிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வட இந்தியாவில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவரின் பேட்டி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற தகவல் தவறானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:FACT CHECK: அஸ்ஸாம் அரசியல்வாதி வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று பரப்பும் நெட்டிசன்கள்!

Fact Check By: Chendur Pandian

Result: False