‘’வண்டாரி தமிழ்மணியிடம் இருந்து வாங்கிய காசை நாம் தமிழர் கட்சித் தலைமையிடம் கொடுத்தேன்,’’ என சாட்டை துரைமுருகன் பெயரில் பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

உண்மை அறிவோம்:

மேகவண்ணன் புதியதடம் என்பவர் ஆகஸ்ட் 3, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், சாட்டை துரைமுருகன் பாண்டியன் பெயரில் வெளியான ட்விட் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். உண்மையில், அந்த ட்வீட் பார்க்கும்போதே போலியானது என தெரியவருகிறது. அத்துடன், இது போலியானதுதான், அரசியல் நோக்கத்திற்காக இப்படி தகவல் பரப்பாதீர்கள் என்று கூறி சிலர் கமெண்ட் பதிந்தும் உள்ளனர். ஆனாலும், சம்பந்தப்பட்ட நபர் இந்த பதிவை டெலிட் செய்யாமல் வைத்துள்ளார்.

சமீபத்தில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வண்டாரி தமிழ்மணி என்பவரிடம் அதே கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் பாண்டியன் என்பவர் பணம் வாங்கிக் கொண்டு திருப்பி தரவில்லை என்றும், இதன்பேரில், இருவருக்கும் இடையே நிகழ்ந்த கருத்து மோதலில், துரைமுருகன் பின்னர் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, தமிழ் மணியின் அலைபேசி எண்ணை பலரிடமும் கொடுத்து, அவரை ஆபாசமாக திட்டச் செய்தார் என்றும் புகார் கிளம்பியது. இதுதொடர்பாக, தமிழ்மணியின் மனைவி தீக்குளித்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுபற்றி இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி இது குடும்ப பிரச்னை என்று கூறியிருந்தது. இந்நிலையில்தான், சாட்டை துரைமுருகன் பெயரில் இத்தகைய ட்விட் பகிரப்பட்டு வருகிறது. ‘’வண்டாரி தமிழ்மணியிடம் வாங்கிய காசை சீமானிடமும் கொடுத்தேன், என்னை கட்சியை விட்டு நீக்கினால் பல உண்மைகளை வெளியிடுவேன்,’’ என துரைமுருகன் கூறியிருப்பதாக, இதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, சாட்டை துரைமுருகன் பாண்டியனின் ட்விட்டர் பக்கத்தில் நீண்ட நேரம் தேடிப் பார்த்தோம்.

ஆனால், அவர் இப்படி எந்த பதிவும் வெளியிடவில்லை. மேலும், தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் சிலர் வதந்தி பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது போலீஸ் புகார் செய்துள்ளதாகவும் துரைமுருகன் வெளியிட்ட பதிவு ஒன்றின் விவரம் கிடைத்தது.

Archived Link

எனவே, சம்பந்தப்பட்ட நபரே தன் மீதான வதந்திகளை மறுத்து, போலீசை நாடியுள்ளதால், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்ற தகவல் தவறானது, போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வாங்கிய காசை சீமானிடம் கொடுத்தேன்: சாட்டை துரைமுருகன் பேரில் பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer

Result: False