குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி என்று மின்சார டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மரக் கிளைகளை வைத்து முட்டுக்கொடுக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்ஃபார்மரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதன் மீது "வளர்ச்சியோ வளர்ச்சி... குஜராத்தில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை S.A.Rafiq என்பவர் 2020 ஆகஸ்ட் 30ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத் மின்சார வாரியத்தின் லட்சணம் என்ற வகையில் இந்த படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இது குஜராத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் பதிவிட்டவர் வழங்கவில்லை. குஜராத் மாநிலத்தில் எந்தப் பகுதியில், எப்போது இது எடுக்கப்பட்டது என்று எந்த விவரமும் இல்லை. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இதனை பல ஆண்டுகளாகவே, ஈராக்கில் எடுக்கப்பட்டது என்றும், உக்ரைனில் எடுக்கப்பட்டது என்றும் இரு தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருப்பதை காண முடிந்தது. அதே நேரத்தில் குஜராத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

iraqkhair.comArchived Link

எனவே, இது ஈராக்கில் எடுக்கப்பட்டதா அல்லது உக்ரைனில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். அப்போது இது ஈராக்கில் எடுக்கப்பட்டது என்று ஈராக் பதிவுகள் சில நமக்கு கிடைத்தன. இந்த படத்துடன் ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.

06452.com.uaArchived Link 1
pikabu.ruArchived Link 2

அதே போல் ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள ஒரு பகுதியில் எடுக்கப்பட்டது என்றும் நமக்கு செய்தி கிடைத்தது. ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசு பகுதியில் நிதி நெருக்கடி காரணமாக மின்சார நிறுவனம் இப்படி பாதுகாப்பில்லாத டிரான்ஸ்பார்மரை வைத்துள்ளது என்றும், நிதிச் சுமை காரணமாக அங்கு ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

ஒவ்வொரு பதிவாக பார்த்துக் கொண்டிருந்த போது நம்முடைய மலையாளம் ஃபேக்ட் கிரஸண்டோ இது தொடர்பாக ஆய்வு செய்திருப்பது தெரிந்தது. அதில் பிரதமரின் வாரணாசியில் இந்த மின்மாற்றி இருப்பதாக பகிரப்பட்டு வந்ததாகவும் அது தவறான தகவல் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

நம்முடைய ஆய்வில்,

இந்த மின் மாற்றி ஈராக், ரஷ்ய நாடுகளில் உள்ளதாகக் கூறப்பட்டு ஏற்கனவே வெளியான பல செய்திகள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் இந்த மின்மாற்றி உள்ளது என்பதை உறுதி செய்ய எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும், இது குஜராத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான எந்த ஒரு பதிவும் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளப் பிரிவு ஏற்கனவே ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், குஜராத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்ஃபார்மர் என பகிரப்படும் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபித்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படமா இது?

Fact Check By: Chendur Pandian

Result: False