பாகிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்துள்ளது என்று கூறி பல படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

"பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் வெடித்தது, ராணுவம் மற்றும் போலீஸ் இடையே கடும் மோதல்" என்று சில படங்கள் பகிரப்பட்டுள்ளன. Namo Ananthan என்பவர் 2020 அக்டோபர் 21ம் தேதி அதைப் பகிர்ந்துள்ளார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதே போல் தென்கொண்டார் சிவா என்பவர் அக்டோபர் 21ம் தேதி வேறு சில படங்களை "பாகிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்தது ராணுவம் போலீசார் இடையே கடும் மோதல்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படங்கள் எல்லாம் தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களில் போது எடுக்கப்பட்டவையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

பாகிஸ்தானில் நடக்கும் கலவரத்தை உள்நாட்டு போர் என்று இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்தி தவறான செய்தியை வெளியிடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அந்த விவாகரத்துக்குள் நாம் செல்லவில்லை. படங்களைப் பார்க்கும் போது சிலவற்றில் உள்ள நபர்கள் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் போல தெரிந்தனர். சில படங்கள் போரால் மிகவும் உருக்குலைந்து நாடுகளில் எடுக்கப்பட்டது போல இருந்தன. எனவே, இந்த படங்களை பற்றி ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: gettyimages.in I Archive

ஒரே ஒரு டாங்கி இருக்கும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அது 2016ம் ஆண்டு சிஎன்என் வெளியிட்ட செய்தியில் இடம் பெற்றிருந்தது. அது சிரியாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கெட்டி இமேஜஸ் அந்த புகைப்படத்தை விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிந்தது.

அசல் பதிவைக் காண: economist.comI Archive

இரண்டாவது சாலையில் வரிசையாக டாங்கிகள் நிற்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அது கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி வெளியாகி இருந்தது. தைவான் தன்னுடைய டேங்கிகளை இலான் வீதிகளில் நிறுத்தி வைத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இதுவும் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லாதது என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: pakistankakhudahafiz.com I Archive

டேங்கியில் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அது பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதுதான். ஆனால், தற்போது இல்லை 2014ம் ஆண்டில் அந்த புகைப்படத்தை பல ஊடகங்கள் பயன்படுத்தி இருப்பதைக் காண முடிந்தது.

இதன் மூலம் Namo Ananthan என்பவர் ஷேர் செய்திருந்த மூன்று புகைப்படங்களில் ஒன்று மட்டுமே பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்றும், அதுவும் 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் என்பதும் உறுதியாகி உள்ளது.

அடுத்ததாக, தென்கொண்டார் சிவா என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட படங்களை ஆய்வு செய்தோம். குண்டுவெடிப்பில் சிதைந்து கிடக்கும் ஜீப் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அது 2009ம் ஆண்டு கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பின் போது எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: cnn.com I Archive

அடுத்ததாக காயம் அடைந்தவரை ஒருவர் சுமந்து செல்லும் படத்தை ஆய்வு செய்தோம். 2013ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி பெஷாவரில் நடந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பின் போது எடுக்கப்பட்டது என்று செய்திகளில் இந்த படம் பகிரப்பட்டு இருந்தது. அதன்பிறகு பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு என்று வெளியாகும் பல செய்திகளில் இந்த புகைப்படத்தை ஊடகங்கள் மாதிரி படமாக பயன்படுத்தி வந்துள்ளன.

அசல் பதிவைக் காண: apimages.com I Archive

ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் தெரு ஒன்றில் நடந்து செல்லும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த படத்தை 2015ம் ஆண்டு முதல் பல ஊடகங்களும் மாதிரி புகைப்படமாக பயன்படுத்தி வந்துள்ளன. உண்மையில் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை. 2015ம் ஆண்டு முதலே பயன்படுத்தி வருவதால் இதற்கும் தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: tribune.com.pk I Archive

கடைசியாக பல வாகனங்கள் பற்றி எரியும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படத்தை சைனா டெய்லி என்ற ஊடகம் 2006ம் ஆண்டு வெளியிட்டிருந்தது. கராச்சியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் பலி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படத்தை Reuters எடுத்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. Reuters இணையதள பக்கத்தில் தேடிய போது அந்த படமும் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: reuters.com I Archive

இதன் மூலம், பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை எடுத்து தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புப்படுத்தி தகவல் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.

முடிவு:

பாகிஸ்தானில் 2020 அக்டோபரில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தின் போது எடுக்கப்பட்டது என்று பகிரப்படும் படங்கள் பழையவை மற்றும் சிரியா, தைவான் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பாகிஸ்தான் உள்நாட்டுப் போர் என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False