‘கேரளாவில் மாத்திரை கலந்த மீன்களை விற்கும் முஸ்லீம்கள்’ என்ற தகவல் உண்மையா?

Update: 2024-10-03 05:48 GMT

‘’கேரளாவில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை மீன்களுக்குள் வைத்து விற்ற முஸ்லீம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’ கேரளாவில் மீன் வியாபாரம் செய்யும் துலுக்கன்ஸ் கடைகளில் மீனில் வயிற்றில் கிட்னியை பாதிக்கும் மாத்திரைகளை பொதித்து வைத்து விற்பனை.. போலீஸ் சோதனையில் கிடைத்தவை. துலுக்கன்ஸ் கிட்ட எவ்வித வியாபாரமும் செய்யாதீர்கள் மக்களே..!’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனுடன் மீன் கடை ஒன்றில் போலீசார் ஆய்வு செய்வது போன்ற வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளனர்.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். முதலில், வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுளில் பதிவேற்றி நாம் தகவல் தேடினோம். அப்போது, இது கேரளாவில் எடுக்கப்பட்ட வீடியோ, என விவரம் கிடைத்தது.


இதன்படி, கடந்த ஜூலை மாதம், 25, 2024 அன்று கொச்சியில் அழுகிப் போன மீன்களை விற்பதாக, புகார் கிடைத்ததன் பேரில், Palluruthy பகுதியில் உள்ள கடைகளில் கொச்சி மாநகராட்சி (Kochi Municipal Corporation) சார்பாக, சோதனை நடத்தப்பட்டது. அப்போது, புழுக்கள் வைத்து, கெட்டுப் போய் கிடந்த நிலையில் இருந்த மீன்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


இதுபற்றி Brave India News என்ற ஊடகம் செய்தி வெளியிட்டது. அந்த வீடியோவை எடுத்தே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இணைத்து, பகிர்ந்துள்ளனர்.

இதே செய்தியை மேலும் சில ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

New Indian Express l Kairali News Online l Kerala Kaumudi

கூடுதல் ஆதாரத்திற்காக, Palluruthy Circle Health Inspector R.S.Madhu என்பவரிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். அவர் பேசுகையில், ‘’Palluruthy வட்டாரத்தில் ரசாயனம் கலந்த, கெட்டுப் போன மீன்கள் மற்றும் இறைச்சி விற்பனை நடைபெறுவதை தடுக்கும் வகையில் நாங்கள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறோம். இதுபோன்றே சமீபத்தில் Thoppumpadi மற்றும் Pallurutthi பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு செய்தோம். அப்போது, சுகாதாரமற்ற வகையில் விற்கப்பட்ட அழுகிப் போன 650 கிலோ மீன்களை பறிமுதல் செய்து, அப்புறப்படுத்தினோம். மற்றபடி, மீன்களுக்குள் எதுவும் மாத்திரை பொதித்து விற்கப்படவில்லை. மீன்களுக்குள் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை பொதித்து வைத்து, முஸ்லீம்கள் விற்றதாகக் கூறுவது தவறு. இது முஸ்லீம்களை குறி வைத்து பகிரப்படும் வதந்தி,’’ என்று குறிப்பிட்டார்.


இறுதியாக, Palluruthy Police Station-ஐ தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய மூத்த காவலர் அருண், ‘’இது வழக்கமான சோதனை நடவடிக்கைதான். இந்த சோதனையில் கெட்டுப் போன மீன்கள் (புழுக்கள் வைத்த நிலையில்) மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. மீன்களுக்குள் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகள் எதுவும் பொதித்து வைக்கப்படவில்லை. அவ்வாறு யாரும் விற்பனை செய்திருந்தால், வழக்குப் பதிந்து, நடவடிக்கை எடுத்திருப்போம்,’’ என்றார். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது.

Update (15-10-2024): எமது மலையாளம் குழு இதுபற்றி நடத்திய ஆய்வில், கூடுதல் விவரம் கிடைத்துள்ளது. இதன்படி, குறித்த வீடியோ Palluruthy அருகே அமைந்துள்ள Pachalam, Ernakulam மார்க்கெட்டில் எடுக்கப்பட்ட ஒன்றாகும். இந்த வீடியோவில் காணப்படும் போலீஸ் அதிகாரியின் பெயர், G.H.I. C.V. Raghu என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரிடம் நமது மலையாளம் குழு, நேரடியாகப் பேசி, மேற்கண்ட விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். 

நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim :  கேரளாவில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை மீன்களுக்குள் வைத்து விற்ற முஸ்லீம்கள்!
Claimed By :  Social Media User
Fact Check :  FALSE
Tags:    

Similar News