‘போதை ஒழிப்பு மாநாட்டில் சி.வி.சண்முகம் பங்கேற்பார்’ என்று அதிமுக அறிவித்ததா?

Update: 2024-09-16 16:00 GMT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் போதை ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சி.வி.சண்முகம் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "போதை ஒழிப்போம், பாதை அமைப்போம் - சி.வி.சண்முகம் சூளுரை. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் போதை ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கிறார். போதை ஒழிப்போம், பாதை அமைப்போம் என சி.வி.சண்முகம் சூளுரை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்ட வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2024 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று போதை ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. இதில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தொல் திருமாவளவன் கூறியிருந்தார். தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பார் என்று அதிமுக அறிவித்ததாக நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது.

மது அருந்தி பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர் சி.வி.சண்முகம். அவரை மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுக அனுப்புகிறது என்று பலரும் அதிமுக-வை விமர்சித்து வருகின்றனர். அப்படி ஒரு அறிவிப்பு வந்ததாக எந்த செய்தியும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் சிவி சண்முகம் பங்கேற்பார் என்று அறிவிப்பு ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடி பார்த்தோம். அதிமுக அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கம், ஐடி விங் பக்கம் எதிலும் அப்படி ஒரு தகவல் இல்லை. நியூஸ் ஜெ இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அதிலும் கூட நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு இல்லை. எனவே, இது போலியானது என்று தெரியவந்தது.


இதை உறுதி செய்துகொள்ள நியூஸ் ஜெ ஆசிரியர் வாட்ஸ் அப் எண்ணுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி வைத்தோம். அவரும் "இந்த நியூஸ் கார்டு போலியானது. நியூஸ் ஜெ இதை வெளியிடவில்லை" என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மது ஒழிப்பு மாநாட்டில் சிவி சண்முகம் பங்கேற்பார் என்று அதிமுக அறிவித்ததாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது, என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்பார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel


Claim :  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் போதை ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பார் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE
Tags:    

Similar News