தன்னுடைய பிறந்த நாளுக்கு தன்னுடைய கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறிக்கொண்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டது போன்று எக்ஸ் தள (ட்விட்டர்) பதிவின் ஸ்கிரீன்ஷாட் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அதில், "திரைப்பட முன்னணி நடிகரான திரு.விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். விஜய், தலைவர், தமிழக வெற்றிக் கழகம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஸ்கிரீன்ஷாட்டை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து பலருக்கும் வாழ்த்துகளைக் கூறி வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கள்ளச்சாராய மரணம் தொடர்பாக கண்டன பதிவை வெளியிட்டிருந்தார். இதனால், விஜய்யின் கட்சியை விஜய் வாழ்த்து கழகம் என்று சமூக ஊட்டங்களில் நையாண்டி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த சூழலில் தன்னுடைய பிறந்த நாளுக்கு தானே வாழ்த்து கூறிக்கொண்டார் என்பது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ஸ்கிரீன்ஷாட்டை பார்க்கும் போது நையாண்டிக்கு உருவாக்கியது போலத் தெரிகிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எக்ஸ் தள முகவரியுடன் இந்த பதிவு வெளியாகி இருப்பதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம். உண்மையில் நடிகர் விஜய் இப்படி வாழ்த்து கூறியிருந்தால் அது பற்றி ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கும். வாழ்த்து வெளியிட்டுவிட்டு அகற்றியிருந்தால் கூட அது பற்றி செய்தியாகி இருக்கும். நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பதால் ஊடகங்கள் 24 மணி நேரமும் அவரது சமூக ஊடக பக்கங்களை கண்காணித்து வந்தன. அவர்களின் கழுகு பார்வைக்கு எதுவும் தப்பியிருக்காது. ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் தள பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில் அப்படி எந்த ஒரு பதிவும் வெளியாகவில்லை. எனவே, அக்கட்சியின் நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டோம். ‘’எப்படி எல்லாம் எங்கள் கட்சிக்கு எதிராக விஷம கருத்தைப் பரப்புகிறார்கள், பாருங்கள்,’’ என்று நம்மிடம் அவர் வருத்தப்பட்டார். இதன் மூலம் இந்த எக்ஸ் தள பதிவு போலியானது என்பது உறுதியானது.

முடிவு:

நடிகர் விஜய் தனக்குத் தானே பிறந்த நாள் வாழ்த்து கூறிக்கொண்டதாக பரவும் எக்ஸ் தள பதிவு ஸ்கிரீனஷாட் விஜய் வெளியிட்டது இல்லை என்பதையும் அது போலியாக உருவாக்கப்பட்டது என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தனக்குத் தானே வாழ்த்து கூறிக்கொண்ட விஜய் என்று பரவும் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False