‘’108 ஆம்புலன்ஸ் உதவி எண் இயங்கவில்லை,’’ எனக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3

உண்மை அறிவோம்:
ஆம்புலன்ஸ் என்பது அனைவருக்கும் அவசர தேவைக்குப் பயன்படக்கூடிய ஒரு பொது சேவையாகும். குறிப்பாக, தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை செய்து வரும் சேவை அளப்பரியதாக உள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய இந்த அத்தியாவசிய சேவை பற்றி மேற்கண்ட தகவல் பரவி வருவதால், நாம் அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

இதன்பேரில், இவர்கள் குறிப்பிட்டுள்ள 044- 71709009 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோம். எவ்வளவு முயன்றும், அது பயன்பாட்டில் இல்லை என்ற தகவலே கிடைத்தது. இதைத்தொடர்ந்து, 108 சேவை எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயன்றோம்.

நீண்ட முயற்சிக்குப் பின், 108 தமிழ்நாடு பிரிவு சூப்பர்வைசர் வினோத், அவர்களின் தொடர்பு நமக்கு கிடைத்தது. அவர் நாம் சந்தேகப்படும் தகவலை பார்வையிட்டார். அதன்பின், ‘’இது தவறான தகவல். இப்படி எந்த மாற்று தொடர்பு எண்ணையும் நாங்கள் அறிவிக்கவில்லை. எங்களது 108 தொடர்பு எண் நல்ல முறையில்தான் இயங்கி வருகிறது,’’ எனக் குறிப்பிட்டார்.

எனவே, இது தவறான செய்தி என்று சந்தேகமின்றி தெரியவருகிறது. நமது வாசகர்கள் இந்த தகவலை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

இது தவிர்த்து, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஆம்புலன்ஸ் சேவை தடையின்றி கிடைப்பதற்காக, சிறப்புக் கட்டுப்பாட்டு அறை ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. அந்த அறையின் தொடர்பு எண் 044- 4006 7108 ஆகும். ஆனால், அதற்கும், நாம் ஆய்வு செய்யும் தகவலில் உள்ள எண்ணிற்கும், எந்த தொடர்பும் இல்லை.

இதுதொடர்பான செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Dinamani News LinkArchived Link

இது மட்டுமின்றி, கடந்த அக்டோபர் 8, 2020 அன்று 108 அவசர உதவி எண் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 2 மணிநேரம் இயங்கவில்லை. அப்போது கூட 044-40170100 என்ற மாற்று எண்ணை சில மணி நேரங்களுக்கு அறிவித்திருந்தனர். பிறகு, அந்த தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது. ஆனாலும், இவர்கள் குறிப்பிடும் எண் அதுவும் கிடையாது.

Vikatan News LinkArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) குறிப்பிட்ட தொடர்பு எண்ணை (044- 71709009) தவறானது என்று, 108 தமிழ்நாடு பிரிவு கூறியுள்ளது.

2) இந்த எண் தற்போது செயல்பாட்டில் இல்லை. ஒருவேளை, இது ஏற்கனவே வேறு ஏதேனும் அவசர சேவைக்காக அறிவிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், தற்போது இது பயன்பாட்டில் இல்லை. பழைய செய்தியை இன்னமும் உண்மைத்தன்மை தெரியாமல், ஆண்டுக்கணக்கில் சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம். அப்படியான ஒன்றாக இது இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

ஏனெனில், இந்த செய்தி 2017ம் ஆண்டிலேயே ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்ததைக் கண்டோம். ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, 3 ஆண்டுகளுக்கும் மேலாகவே பகிரப்பட்டு வரும் குறிப்பிட்ட தகவலில் நம்பகத்தன்மை இல்லை என்பதால், அதனை மேற்கொண்டும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்வது, சாமானிய மக்களை குழப்பக்கூடியதாக அமையும் என்பதை இந்த இடத்தில் சமூக பொறுப்புணர்வுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:108 ஆம்புலன்ஸ் உதவி எண் இயங்கவில்லை எனக் கூறி பரவும் வதந்தி!

Fact Check By: Pankaj Iyer

Result: False