50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர் என்று ஒரு மலரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மலர் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் திரிசங்கு மலர் அனைவரும் பார்த்து மகிழுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை K Mahendran என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 அக்டோபர் 30ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர் என்று முன்பு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஆய்வு செய்யப்பட்டு, அது மலர் அல்ல, ஆழ்கடல் சங்கு என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், வேறு ஒரு மலரை 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர் என்று சிலர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. எனவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.

புதிதாக பகிரப்படும் மலரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தை ஆப்ரிக்கன் பாபாப் (African Baobab) மலர் என்று குறிப்பிட்டு 2013ம் ஆண்டு பிளாக் ஒன்றில் பதிவிட்டிருந்தது தெரிந்தது. பாலைவனத்தில் வளரக் கூடிய ஒரு வகையான மரத்தின் மலர் அது. இந்த மரம் ஆயிரம் ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது என்று தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: homeguides.sfgate.com I Archive 1 I gardeningknowhow.com I Archive 2

இது 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக் கூடிய மலரா என்று தேடிப் பார்த்தோம். இது ஒவ்வொரு ஆண்டும் மே முதல் ஜூலை மாதம் வரை பூக்கக் கூடியது என்று தகவல் கிடைத்தது. இந்த மரம் முளைத்ததிலிருந்து முதல் 10 - 20 ஆண்டுகள் வரை கூட பூக்காமல் இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பூக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு திரிசங்கு பூ என்று எல்லாம் பெயர் இல்லை. ஆப்ரிக்கன் பாபாப் மலர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இது துர்நாற்றம் வீசும் மலர் என்றும், வவ்வால் போன்ற சில உயிரினங்கள் இந்த துர்நாற்றத்தால் கவரப்படுகின்றன என்றும் தகவல் கிடைத்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர் என்று பகிரப்படும் இந்த படமும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர் என்று பரவும் படம் ஆப்ரிக்கன் பாபாப் என்ற தாவரத்தின் மலர் என்பதும், அது ஆண்டு தோறும் பூக்கக் கூடியது என்றும் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:Rapid Fact Check: திரிசங்கு மலர் என்று மீண்டும் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False