ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கிய பிறகுதான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகள் ஏர் இந்தியாவில் விமானப் பணிப் பெண் வேலை செய்து வந்த விவரம் தெரியவந்துள்ளது என்றும் அதைத் தொடர்ந்து அவருடைய பணியை டாடா நிறுவனம் மாற்றிவிட்டது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ராம்நாத் கோவில் மற்றும் அவரது மகள் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மகள் தனது அடையாளத்தை மறைத்து சிறிது காலம் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவர் பணியிடத்திற்குச் செல்லும் போது, ​​அமெரிக்கப் பாதுகாப்பு இயந்திரம் - தொலைவில் இருந்து கண்கானித்தது, அதனால் உணவகத்தின் உரிமையாளருக்கோ, மற்ற ஊழியர்களுக்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ தெரியாது. பிரபலமாக இருந்தாலும், அடக்கமாக இருப்பது மிகுந்த பணிவுக்கும், பெற்றோரின் நல்ல அழகுக்கும் அடையாளம்... ஒபாமாவின் மகள் அதைச் செய்தார்... பல வருடங்களாக, குறிப்பாக இந்திய ஊடகங்களில், தேவையில்லாத விளம்பரத்தையும் பிரபலத்தையும் அவருக்கு தந்தது..!

ஆனால், இது வரைக்கும், இதேபோன்ற ஒரு இந்தியப் பெண்ணின் உச்சபட்ச பணிவு, நட்பு பற்றி யாருக்கும் தெரியாது. அவர் பெயர் சுவாதி. நாட்டின் முன்னணி விமான நிறுவனமான ‘ஏர் இந்தியா’வில் விமானப் பணிப்பெண்ணாக இருந்தார். அவர் ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற தொலைதூர நாடுகளில் ‘ஏர் இந்தியா’ போயிங் 777 & 787 விமானங்களில் விமானப் பணிப்பெண்ணாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஆனால், இந்த 5.4′ உயரமுள்ள சுவாதியின் முழுப் பெயர் என்ன தெரியுமா...?

அவர் பெயர் திருமதி ஸ்வாதி கோவிந்த்..! ஆம், நீங்கள் யூகித்திருப்பது சரிதான் - அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகள்..! இது வரை ‘ஏர் இந்தியா’ அதிகாரிகளுக்கு கூட இது தெரியாது.பிரஸ் இல்லை. ராம்நாத் கோவிந்தும், அவரது மகள் ஸ்வாதி கோவிந்தும் இந்த விஷயத்தை வெளியிடாததால், சமீப காலம் வரை ரகசியமாக இருந்தது...! ஆனால் அது இனி ரகசியம் அல்ல... ஏனென்றால் ‘ஏர் இந்தியா’ டாடாக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உண்மையை அறிந்ததும், தற்போதைய டாடா அதிகாரிகள் ஸ்வாதி கோவிந்தை விமானப் பணிப்பெண் பதவியில் இருந்து 'ஏர் இந்தியா' அலுவலகத்தின் உள் விவகாரப் பிரிவுக்கு மரியாதையாகவும் அமைதியாகவும் மாற்றியுள்ளனர் - ஒருவேளை அவரது சிறப்பு பாதுகாப்புத் தேவைகள் (ஜனாதிபதியின் மகளாக) . நமது ஜனாதிபதிக்கு ஆழ்ந்த மரியாதைகள்...!

இவர் மகத்தான குணங்களை... தனது மகளுக்குள் புகுத்துவதை அமைதியாக செய்திருக்கிறார்...! இன்றைய விஷமிகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு ஒரு அரிய உதாரணம்..!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை வாழ்க நலமுடன் வளமுடன் யானை ப்ரியன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 8ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குடிரயசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி, ஏர் இந்தியா நிறுவனத்தில் ஹேர் ஹோஸ்டஸ் (விமானப் பணிப்பெண்) ஆக பணியாற்றி வருகிறார் என்ற செய்தி, ராம்நாத் கோவில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதே வெளியானது. தந்தை குடியரசுத் தலைவராக ஆனாலும் ஹோர் ஹோஸ்டஸ் வேலையைத் தொடர்வேன் என்று சுவாதி பேட்டி அளித்தது அப்போது வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகள் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருவது யாருக்குமே தெரியாது என்பது போலவும், டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கிய பிறகுதான் இந்த விவரம் டாடாவுக்கே தெரியவந்தது என்றும், உடனடியாக அவருக்கு அலுவலக பணி கொடுத்து மரியாதை செய்தது போன்றும் சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஊருக்கே தெரிந்த விஷயம் இப்போதுதான் இவர்களுக்குத் தெரிந்துள்ளது. தங்களுக்கு தெரியாத விஷயம் மற்றவர்களுக்கும் தெரியாது என்பது போல பதிவு இருந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

2017ம் ஆண்டு சுவாதி அளித்த பேட்டியைத் தேடி எடுத்தோம். 2017ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி சுவாதி அளித்திருந்த பேட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் கிடைத்தது. அதில், விமானப் பணிப்பெண்ணாகத் தொடர்வேன் என்று ராம்நாத் கோவிந்த் மகள் கூறினார் என்று செய்தி வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் சுவாதி மிகவும் ரகசியமாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்ற தகவல் தவறானது என்று உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive 1 I dailythanthi.com I Archive 2

அடுத்ததாக ஏர் இந்தியாவை டாடா கையகப்படுத்திய பிறகு அவரது பணி மாற்றப்பட்டதா என்று தேடினோம். 2017ம் ஆண்டு நவம்பரில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், பாதுகாப்பு காரணங்களுக்காக ராம்நாத் கோவிந்தின் மகளுக்கு ஏர் இந்தியா தலைமை அலுவலக பணி ஒதுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகையில், "குடியரசுத் தலைவரின் மகள் என்பதற்காக சுவாதி விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றும் போது அவரைச் சுற்றிப் பாதுகாப்பு வீரர்கள் இருக்க அனுமதிக்க முடியாது. விமானத்தில் அதிக பயணிகள் இருக்கையை அவரது பாதுகாப்பு வீரர்கள் எடுத்துக்கொள்வது சாத்தியமில்லாதது" என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive 1 I ndtv.com I Archive 2

ஏர் இந்தியாவில் பணியாற்றும் ராம்நாத் கோவிந்தின் மகள் என்று வேறு ஒரு பெண்ணின் படத்தை வைத்து இதே பதிவை வட இந்தியாவில் பலரும் பகிர்ந்து வந்துள்ளனர். அந்த தகவல் தவறு என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் ஆய்வு கட்டுரை வெளியாகி உள்ளது. அதை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா 2022ம் ஆண்டுதான் கையகப்படுத்தியது. சுவாதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காரணமாக அவருக்கு 2017ம் ஆண்டிலேயே அலுவலக பணி ஒதுக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதன் மூலம் டாடா நிறுவனம் கையகப்படுத்திய பிறகுதான் குடியரசுத் தலைவர் மகள் அங்கு பணியாற்றுவது வெளி உலகத்துக்குத் தெரியவந்தது என்றும், சுவாதி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை கவுரவிக்கும் வகையில் அவருக்கு அலுவலக பணியை டாடா நிர்வாகம் செய்யும் ஏர் இந்தியா அதிகாரிகள் வழங்கினார்கள் என்றும் பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் உண்மையுடன் தவறான தகவலைச் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகள் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய தகவல் உடன் பணி புரிபவர்களுக்கு கூட தெரியாமல் இருந்தது என்றும், டாடா நிறுவனத்தின் கைகளுக்கு சென்ற பிறகே தெரியவந்தது என்றும், அவருக்கு அலுவலக வேலையை டாடா அதிகாரிகள் ஒதுக்கினார்கள் என்றும் பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:விமானப் பணிப்பெண்ணாக இருந்த ராம்நாத் கோவிந்த் மகளுக்கு மாற்று வேலை ஒதுக்கியதா டாடா நிறுவனம்?

Fact Check By: Chendur Pandian

Result: Partly False