‘இந்துக்களை முட்டாளாக்கிய சந்திரபாபு நாயுடு’ என்று மாதவி லதா விமர்சித்தாரா?
திருப்பதி லட்டு விவகாரத்தில் 120 கோடி இந்துக்களை முட்டாளாக்கிய சந்திரபாபு நாயுடு என்று பாஜக-வை சார்ந்த மாதவி லதா கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I X Post I Archive
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐதராபாத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மாதவி லதா தெலுங்கில் அளித்த பேட்டி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் "ஒரு டெஸ்ட் பேப்பர் வைத்து கொண்டு 120 கோடி இந்து மக்களை முட்டாளாக்கிய சந்திரபாபு நாயுடு 😂 லூசா இருந்தாலும் அக்கா சரியாக சொல்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருப்பதி லட்டில் கலப்படம் நிகழ்ந்ததாக ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். அப்படி அறிவித்த சந்திரபாபு நாயுடுவை பாஜக -வை சார்ந்த மாதவி லதா கடுமையாக விமர்சித்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் உள்ளார். அவர் ஆதரவில்தான் நரேந்திர மோடி ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அப்படி இருக்க பாஜக-வை சார்ந்தவர் சந்திரபாபு நாயுடுவை எப்படி விமர்சிப்பார் என்ற கேள்வி எழுந்தது. மேலும் மாதவி லதா தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனையே விமர்சித்து வருகிறார். ஜெகன் மோகனுக்கு எதிராக பேசியதாக மட்டுமே செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. எனவே, ஜெகன் மோகனை விமர்சித்த வீடியோவை சந்திரபாபு நாயுடுவை விமர்சித்தது போன்று மாற்றி பதிவிட்டுள்ளார்களா என்ற சந்தேகமும் எழுந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: economictimes.indiatimes.com I Archive
முதலில் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்தது உண்மையா என்று அறிய கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பதிவிட்டு தேடினோம். ஆனால், விமர்சித்தது போன்று எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. உண்மையில் அவர் விமர்சித்திருந்தால் எல்லா ஊடகங்களும் அதை வெளியிட்டிருக்கும். மாதவி லதா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியைத்தான் கடுமையாக விமர்சித்து வருகிறார். எனவே, சந்திரபாபு நாயுடுவை விமர்சித்தார் என்ற தகவல் தவறானதாக இருக்கலாம் என்று தெரிந்தது.
அடுத்ததாக மாதவி லதா அளித்த பேட்டியைத் தேடி எடுத்தோம். வனிதா என்ற தெலுங்கு ஊடகத்திற்கு அவர் பேட்டி அளித்திருந்தார். அந்த வீடியோவின் 3.20 நிமிடத்திற்குப் பிறகு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி வருகிறது. அந்த வீடியோவை தெலுங்கு தெரிந்தவர்களுக்கு போட்டு காண்பித்து அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டோம்.
இதை பார்த்த அவர்கள், "சந்திரபாபு நாயுடு ஒரு பொறுப்பான முதலமைச்சர் என்று கருதுகிறேன். கலப்படம் நிகழ்ந்துள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு எவ்வளவு அனுபவம் உள்ளது. அவர் பொய் சொல்லுவாரா? எதற்கு அவர் பொய் சொல்ல வேண்டும். இது என்ன வேடிக்கையான விஷயமா?
தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.டி.ராமராவ் திருப்பதி கோவில் தரிசனத்துக்கு வருபவர்களுக்கு லட்டு, தங்க விடுதிகள், அன்னதானம் போன்றவற்றை ஏற்பாடு செய்தார். அப்படிப்பட்ட கட்சி அது. எதுவுமே இல்லாத, உண்மையில்லாத ஒரு ஆய்வுக்கூட அறிக்கையை ஒரு முதலமைச்சர் எழுந்து நின்று சொல்வாரா? உண்மையில்லாத ஒன்றைச் சொல்வது, பொய்யை உருவாக்குவது என ஏதுவாக இருந்தாலும் சரி, 120 கோடி இந்துக்கள் என்பது ஒரு சிறிய விஷயமா? ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆன நிலையில் இவ்வளவு ஆபத்தான விஷயத்தை அவர் செய்வாரா? அவர் அப்படி சொல்கிறார் என்றால் ஏதோ விஷயம் இருக்கும். இதை எல்லாம் மக்கள் யோசிக்க மாட்டார்களா. நான் இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் நபர். எனக்கு என்ன வேண்டும் என்றால் இந்த விஷயத்தில் எது உண்மை, பொய் என்று தெரிய வேண்டும். எனவே சிபிஐ விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று லதா பேசுவதாகக் கூறினர்.
அடுத்ததாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு வீடியோவை போட்டுக் காண்பித்தோம். அதை பார்த்த அவர்கள் ‘’சந்திரபாபு நாயுடுவை விமர்சித்தது போன்று தோற்றம் ஏற்படும் வகையில் மாதவி லதா பேசியதை சுருக்கியுள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் போது சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பேசியது போன்ற தோற்றம் வருகிறது. ஆனால், முழு வீடியோவை பார்த்தால் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக அவர் பேசியிருப்பதை காணலாம். அவ்வளவு பெரிய தலைவர், முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த 100 நாளில் இப்படி பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது போல பேசுகிறார்,’’ என்றனர்.
தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் மாதவி லதா பேசிய பேச்சை முழுவதுமாக வெளியிடாமல், தங்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் வெட்டி தனியாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் லட்டு விவகாரத்தில் இந்துக்களை முட்டாளாக்கிய சந்திரபாபு நாயுடு என்று மாதவி லதா கூறியதாக பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சந்திரபாபு நாயுடுவை மாதவி லதா விமர்சித்ததாக பரவும் வீடியோ முழுமையானது இல்லை, எடிட் செய்து சுருக்கப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel I Instagram