ரூபாய் வீழ்ச்சி காரணமாக மக்களுக்கு என்ன கவலை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ரூபாயின் வீழ்ச்சி மக்களுக்கு என்ன கவலை. நீங்கள் உங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் இந்திய ரூபாயைக் கொண்டுதான் வாங்குகிறீர்கள் பிறகு அமெரிக்க டாலரின் மதிப்பு குறித்து நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை - நிர்மலா சீதாராமன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை P Kannan TamilNadu என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மே 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது பற்றி மக்களுக்கு என்ன கவலை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியது போன்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நிதியமைச்சர் இப்படி கேட்க வாய்ப்பே இல்லை என்பதால் இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

பார்க்க புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு உள்ளது. ஆனால், அதன் வழக்கமான பின்னணி டிசைன் இல்லை. எனவே, இது போலியானதாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தோம். புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், மே 20, 2022 அன்று நிர்மலா சீதாராமன் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை என்று தெரிந்தது. போலியாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டை உருவாக்கியிருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்ய புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் இந்த நியூஸ் கார்டு போலியானது, புதிய தலைமுறை இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்று உறுதி செய்தனர்.

அடுத்து, நிர்மலா சீதாராமன் இப்படி ஏதும் கூறினாரா என்று ஆய்வு செய்தோம். மே 20ம் தேதி வெளியான செய்திகளைப் பார்த்தோம். நிர்மலா சீதாராமன் இப்படி குறிப்பிட்டார் எனத் தமிழ், ஆங்கிலம் என எந்த மொழி ஊடகத்திலும் இப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தேடினோம். அப்போது ராகுல் காந்தி பெயரில் இயங்கும் போலி ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து இப்படி ஒரு ட்வீட் வெளியாகி இருப்பது தெரிந்தது.

மே 12ம் தேதி அந்த ட்வீட் வெளியாகி இருந்தது. நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசுவது போன்ற படத்துடன் அந்த ட்வீட் வெளியிடப்பட்டிருந்தது. அதில், "என்னுடைய குடும்பம் மளிகை பொருட்கள் மற்றும் இதர பொருட்களை இந்திய ரூபாய் கொண்டே வாங்குகிறது. நாங்கள் அமெரிக்க டாலரைப் பயன்படுத்துவது இல்லை. டாலரின் மதிப்பு பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நிர்மலா சீதாராமன் கூறினார் என அதில் குறிப்பிடவில்லை. ஆனால், நிர்மலா சீதாராமன் இப்படி குறிப்பிட்டார் என்று கருதும் வகையில் பதிவு வெளியாகி இருந்தது.

Archive

ராகுல் காந்தி பெயரில் செயல்படும் போலியான ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு அடிப்படையில், புதிய தலைமுறை வெளியிட்டது போன்று போலியான நியூஸ் கார்டை தயாரித்து வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் ரூபாய் வீழ்ச்சி அடைந்தால் மக்களுக்கு என்ன கவலை என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ரூபாய் வீழ்ச்சியடைவதால் மக்களுக்கு என்ன கவலை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ரூபாய் வீழ்ச்சி அடைவதால் மக்களுக்கு என்ன கவலை என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False