ரயில் நிலைய நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சி... தமிழ்நாட்டைச் சார்ந்ததா?

Update: 2024-10-22 05:41 GMT

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ளம் சென்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I instagram.com I Archive

ரயில் நிலையத்தின் நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ள நீர் பாயும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், "ஈரோடு, சேலம், பங்காருப்பேட் வழியாக செல்லும் பெங்களூர் சிட்டி விரைவு வண்டி இன்னும் சற்று நேரத்தில் மூன்றாவது நடைமேடைக்கு வந்து சேரும்" என்று தமிழில் அறிவிப்பு செய்யப்படுகிறது.


உண்மைப் பதிவைக் காண: Youtube

இதே வீடியோ யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் "சென்னை, தமிழ்நாடு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வெள்ளம் பாயும் வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2024 அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழை பெய்தது. சென்னை, புறநகர் பகுதிகளில் சில இடங்களில் 30 செ.மீ அளவுக்கு மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. அதே போன்று கோவையிலும் கன மழை பெய்தது.

இந்த நிலையில் கோவையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயில் தொடர்பான அறிவிப்பு பெயர் குறிப்பிடப்படாத ரயில் நிலையத்தில் அறிவிப்பது போலவும், அந்த ரயில் நிலையத்தில் தண்டவாளம் மூழ்கி நடைமேடை வரை தண்ணீர் செல்வது போலவும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.


உண்மைப் பதிவைக் காண: zeenews.india.com I Archive

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். இதே வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்ததைக் காண முடிந்தது. ஆனால், ஊரின் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. இதனால் இந்த வீடியோ தொடர்பாக தொடர்ந்து தேடினோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ரயில் நிலையத்தின் பெயர் தெரிகிறதா என்று பார்த்தோம். சற்று மங்கலாகத் தெரிந்தது. 'KOLA" என்ற எழுத்துக்கள் மட்டும் தெரிந்தது.

Full View

ரிவர்ஸ் இமேஜ் தேடலின் போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ போன்று வேறு ஒரு வீடியோவும் கிடைத்தது. அதில், ரயில் நிலையத்தின் பெயர் இந்தியில் சற்று தெளிவாகத் தெரிந்தது. கூகுள் லென்ஸ் மூலம் அதை புகைப்படம் எடுத்து மொழிமாற்றம் செய்து பார்த்த போது, "Kolayat" என்று வந்தது.

Full View

கோலயாத் என்று ஏதாவது ரயில் நிலையம் உள்ளதா, அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். கூகுளில் கோலயாத் ரயில் நிலையத்தில் வெள்ளம் என்று டைப் செய்து தேடிய போது, பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோலயாத் ரயில் நிலையத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக செய்திகள், வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. இதன் மூலம் இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலம் கோலயாத் ரயில் நிலையத்தை சார்ந்தது தான் என்பது தெளிவானது.


உண்மைப் பதிவைக் காண: Google Map

அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற கட்டிடங்கள், கோலயாத் ரயில் நிலையத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள கூகுள் மேப்பில் தேடினோம். அப்போது, கூகுள் ஸ்ட்ரீட் மேப்பில் அந்த ரயில் நிலையத்தின் கடைசி பகுதி கிடைத்தது. அதுவும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற இடங்களும் ஒத்துப்போயின. இதன் மூலம் இந்த வீடியோ கோலயாத் ரயில் நிலையத்தில்தான் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

முடிவு:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோலயாத் என்ற ரயில் நிலையத்தில் வெள்ளம் கரைபுரண்டோடிய பழைய வீடியோவை எடுத்து தமிழ்நாட்டில் நிகழ்ந்தது போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel
Claim :  தமிழக ரயில் நிலையம் ஒன்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் வீடியோ!
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE
Tags: