
இஸ்ரேலுக்குள் பாராஷூட் மூலம் இறங்கித் தாக்குதல் நடத்திய ஹமாஸ் படை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
பாராஷூட்டில் வீரர்கள் தரையிறங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “PUBGல வர்ற மாதிரி இஸ்ரேலுக்கு உள்ள இறங்கிருக்காங்க ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Troll Mafia என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 அக்டோபர் 8ம் தேதி பதிவிட்டிருந்தது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் நடத்தியதைத் தொடர்ந்து போர் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் வீரர்கள் பாராஷூட் மூலம் இஸ்ரேலுக்கு நுழைந்த காட்சி என்று பலரும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.
இஸ்ரேல் நாட்டில் பாராஷூட் மூலம் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதா என்று தேடிப் பார்த்தோம். கூகுளில் இஸ்ரேல், ஹமாஸ், பாராஷூட் என இந்த விவகாரம் தொடர்பான சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது இஸ்ரேலுக்குள் நுழைய பயிற்சி எடுத்த வீடியோவை ஹமாஸ் வெளியிட்டது என்று பாராகிளைடரில் சிலர் தரையிறங்கும் வீடியோ தொடர்பான செய்தி கிடைத்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தொடர்பாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
இந்த வீடியோவில் ஒரு கட்டிடத்தில் அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதை கூகுள் லென்ஸ் பயன்படுத்தி மொழிமாற்றம் செய்தோம். அரசு மொழியில் ராணுவ கல்லூரி என்று எழுதப்பட்டிருந்தது. இஸ்ரேலில் அரபி எழுத்துக்கள் பயன்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஹீப்ரு மொழி பயன்படுத்துவார்கள். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுளில் தேடினோம். அப்போது எகிப்தின் ராணுவ அகாடமி என்று குறிப்பிட்டு சில பதிவுகள் வெளியாகி இருந்தன.
இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்த ஹமாஸ் என்று எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் சிலர் பதிவிட்டிருந்த வீடியோவுக்கு இது தவறு, இது எகிப்தின் ராணுவ அகாடமி என்று சிலர் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதன் அடிப்படையில் தேடினோம். ஆனால், இந்த வீடியோ தொடர்பாக எந்த ஒரு தகவலையும் கண்டறிய முடியவில்லை.
அடுத்ததாக எகிப்தின் ராணுவ அகாடமி எப்படி இருக்கும் என்று அறிய அது பற்றித் தேடினோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள கட்டடமும், எகிப்தின் ராணுவ அகாடமியும் ஒன்றாக இருந்தது. அதன் கூகுள் ஸ்ட்ரீட் மேப்பை பார்த்தோம். கட்டடம், முகப்பு பகுதியில் உள்ள இலச்சினை (லோகோ) எல்லாம் சரியாகப் பொருந்தியது. இதன் மூலம் இந்த வீடியோ எகிப்தில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

எகிப்தின் ராணுவ அகாடமி பகுதியில் பாராஷூட் மூலம் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை இஸ்ரேலில் பாராஷூட் மூலம் நுழைந்து தாக்கிய ஹமாஸ் படையினர் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
எகிப்து ராணுவம் மேற்கொண்ட பயிற்சி வீடியோவை இஸ்ரேலில் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இஸ்ரேலுக்குள் இறங்கிய ஹமாஸ் படை என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
