
மோடி அரசு குஜராத்தில் 50க்கும் மேற்பட்ட இந்து கோவில்களை இடித்துத் தள்ளி, அந்த இடத்தை அம்பானி பெயருக்கு மாற்றிக்கொடுத்துள்ளதாக ஒரு வீடியோவுடன் கூடிய தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
| Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
Alawdeen Shaikalawdeen என்ற ஃபேஸ்புக் ஐடி-யில் இருந்து 2019 செப்டம்பர் 23ம் தேதி ஓர் வீடியோ பகிரப்பட்டுள்ளது. 1.11 நிமிடங்கள் மட்டும் அந்த வீடியோ ஓடுகிறது. அதில், காந்தி நகரில் 50க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் இடிக்கப்படுவதாகவும் அதை எதிர்த்த மக்கள் தாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நிலைத் தகவலில், “மோடி அரசு குஜராத்தில் 50 க்கும் மேல் கோயில்கள் கோயில் இடத்தையும் அம்பானி பெயருக்கு மாற்றப்பட்டது கோவிலுக்குள் வந்த பொது மக்களை அடித்து விரட்டியது காவல் துறை” என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது, கோவில் நிலத்தை அம்பானி பெயருக்கு மாற்றிக்கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். பதிவு வெளியான ஒரு சில நாட்களிலேயே 5.9 ஆயிரம் பேர் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
வீடியோ எடிட் செய்யப்பட்டு வெளியிட்டது போல் உள்ளது. மோடி அரசு குஜராத்தில் இந்து கோவில்களை இடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது தற்போது நிகழ்ந்தது போல பதிவிட்டுள்ளனர். மோடி குஜராத் முதல்வராக இருந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதா அல்லது தற்போது பிரதமரான பிறகு, குஜராத்தில் கோவில்களை இடிக்க உத்தரவிட்டார் என்று கூறுகிறார்களா என்பது தெளிவாக இல்லை. மோடி அரசு குஜராத்தில் என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் பிரதமர் மோடி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று குறிப்பிட முயன்றுள்ளனர் என்று தெரிகிறது.
வீடியோவைப் பார்த்தோம்… அதில் மோடி தலைமையிலான குஜராத் அரசு காந்தி நகரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து வருகிறது. இதில், சாலை ஓரம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்பட்ட 50க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது குறித்து குஜராத் மாநில பா.ஜ.க கருத்து கூற மறுத்துவிட்டது, ஆனால், தங்களுக்கு இடப்பட்ட பணியை செய்துள்ளதாக காந்திநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், எந்த ஒரு இடத்திலும் அம்பானிக்கு இந்த இடங்களை அளிப்பதற்காக கோவில்கள் இடிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றே தெரிவித்தனர்.
இதன் மூலம், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்பது உறுதியானது. இருப்பினும் எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று தேடினோம். வீடியோவில் 50 temples brought down என்று குறிப்பிட்டு இருந்தனர். அதை அப்படியே கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது என்.டி.டி.வி வெளியிட்ட வீடியோ மற்றும் செய்திகள் நமக்குக் கிடைத்தன.
| Archived Link |
2008ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கிடைத்தது. அதில், குஜராத் தலைநகர் காந்தி நகரில் கடந்த ஒரு மாதத்தில் 80 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன என்று இருந்தது.
சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவில் உள்ளிட்ட கட்டிடங்களை இடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காந்திநகர் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களைக் கணக்கெடுத்தது. இதில், 107 கோவில்கள் பிரதான சாலையில் இருப்பது தெரியவந்தது. மேலும் 312 கோவில்கள் பிற பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. இவை அனைத்தும் அகற்றப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர்.
மோடியின் இந்த செயல்பாட்டை விஷ்வ இந்து பரிஷத் கண்டித்து அறிக்கை வெளியிட்டதும் நமக்கு கிடைத்தது. அதில், மோடியை அவுரங்கசீப்புடன் ஒப்பிட்டு வி.எச்.பி தலைவர் அசோக்சிங்கால் விமர்சித்திருந்தார்.
| Times of india | Archived Link 1 |
| indiatoday.in | Archived Link 2 |
| telegraphindia.com | Archived Link 3 |
இதைத் தொடர்ந்து காந்தி நகரில் இந்து கோவில்கள் இடிக்கும் பணியை மோடி நிறுத்திவைத்ததாக மற்றொரு செய்தியும் நமக்கு கிடைத்தது. இந்த செய்திகள் எதிலும், அம்பானிக்கு நிலத்தை கொடுப்பதற்காக கோவில்கள் இடிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.
நம்முடைய ஆய்வில்,
வீடியோ உண்மையானதுதான்… 10 ஆண்டுகளுக்கு முன்பு என்.டி.டி.வி வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்துள்ளது.
அந்த செய்தியில், அம்பானிக்கு கோவில் நிலம் வழங்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.
2008ம் ஆண்டு நவம்பர் மாதம் குஜராத்தில் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 80-க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு நடந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்பானிக்கு நிலத்தை வழங்குவதற்காக இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது என்று கூறுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “கோவில்களை இடித்து அந்த நிலம் அம்பானிக்கு வழங்கப்பட்டது” என்ற தவறான தகவல் சேர்த்து மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:அம்பானிக்காக 50க்கும் மேற்பட்ட கோவில்களை மோடி இடித்ததாக வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False


