பிச்சை எடுத்த திருநங்கையை மருத்துவராக்கிய போலீஸ் அதிகாரி என்று பரவும் தகவல் உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

மதுரையில் பிச்சை எடுத்த திருநங்கையை காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் மருத்துவராக்கினார் என்று என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

போலீஸ் இன்ஸ்பெக்டருடன் மருத்துவர் ஒருவர் நிற்கும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பிச்சை எடுத்த திருநங்கையை மருத்துவராக்கிய மதுரை காவல்துறை பெண் அதிகாரி! வாழ்த்துகள் அம்மா. பாராட்ட நினைத்தால் பகிருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பதிவை TAMIL GOOD POSTS என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 பிப்ரவரி 1ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிச்சை எடுத்த திருநங்கையை மருத்துவராக்கிய காவல் துறை அதிகாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது, பிச்சை எடுத்த திருநங்கையை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து அவர் படிப்புக்கு போலீஸ் அதிகாரி உதவி செய்தது போல தெரிகிறது. எனவே, இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

மதுரை, திருநங்கை, காவல் துறை அதிகாரி, மருத்துவர் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டு இது தொடர்பாக செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில், “மருத்துவம் படித்துவிட்டு பிச்சை எடுத்துவந்த திருநங்கைக்கு உதவி செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்” என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த திருநங்கையின் பெயர் கவி. அவரது உண்மையான பெயர் மகேஸ்வரன். தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர். 2018ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார். அதன் பிறகு அவர் திருநங்கையாக மாறியுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive 1 I hindutamil.in I Archive 2

கொரோனா காலத்தில் அவர் திருநங்கையாக மாறிய விவரம் தெரியவரவே, மருத்துவமனை நிர்வாகம் அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. வேறு வேலை கிடைக்காத சூழலில் அவர் பிச்சை எடுத்து வந்துள்ளார் என்று செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

2020ம் ஆண்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, திருநங்கைகள் சிலர், கடைகளில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த சில திருநங்கைகளை மீட்டு விசாரித்தனர். அப்போதுதான் கவி தான் ஒரு மருத்துவர் என்றும் தன்னை அனைவரும் புறக்கணித்ததால் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர், சான்றிதழை எடுத்து வரும்படி கூறியுள்ளார். அதில் கவி உண்மையில் டாக்டர் என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவராகத் தொடர உதவி செய்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், தமிழ்நாடு காவல்துறை ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்த புகைப்படம் மற்றும் செய்தி வெளியாகி இருந்தது. அதில், “திருநங்கையின் டாக்டர் கனவிற்கு ஒளியேற்றிய காவல் ஆய்வாளர். மதுரை மாநகர் திலகர் திடல் பகுதியில் தனியாகச் சுற்றித்திரிந்த திருநங்கை ஒருவரை அழைத்து விசாரித்தபோது தான் MBBS முடித்து உள்ளதாகவும் தனக்கு திருநங்கை என்ற சான்றிதழ் பெறுவதற்கு சிரமமாய் இருப்பதுடன் சமுதாயத்தில் நிரந்தர அங்கீகாரம் இல்லாததால் வேறு வழியின்றி பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்துவதாக திலகர் திடல் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்களிடம் தனது நிலையைக் கூறி அழுதார். அவரது நிலையை உணர்ந்த காவல் ஆய்வாளர் அவர்கள் மருத்துவ படிப்பதற்கான சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று சரி பார்த்ததில் அவர் கூறிய தகவல் உண்மை என்பதை அறிந்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர் மருத்துவ தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து, மருத்துவமனை அமைப்பதற்காக ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தற்போது மருத்துவராகத் திருநங்கை அவர்கள் தனது பணியை தொடங்க இருக்கிறார். கூடிய விரைவில் திருநங்கை ஒருவர் டாக்டராக மதுரை மாநகரில் வலம் வரத் தமிழக காவல்துறை சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை தமிழ்நாடு காவல்துறை 2020ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி வெளியிட்டிருந்தது.

இந்து தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரிடமும் திருநங்கை கவி ஆகியோரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தனர். அதில், கவி என்கிற மகேஸ்வரன் மருத்துவம் படித்தது உண்மை என்று அவர் உறுதி செய்திருந்தார். மேலும், தான் மிகுந்த மன வேதனையில் இருப்பதால் தன்னுடைய அடையாளம் எதுவும் வெளியே தெரியாமல் பாதுகாக்கும்படி திருநங்கை கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தனர். 

திருநங்கை கவியை இன்ஸ்பெக்டர் மருத்துவராக்கவில்லை. மருத்துவம் படித்துவிட்டு யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்த திருநங்கை கவி-க்கு மீண்டும் மருத்துவப் பணி செய்ய ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என்பதே உண்மை. 2018ம் ஆண்டில் படித்து பட்டம் பெற்ற போதே கவி மருத்துவராகிவிட்டார். அவர் மருத்துவரான பிறகுதான் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் திருநங்கை என்பதை அறிந்து மருத்துவமனை நிர்வாகம் திருநங்கை கவி-யை பணிநீக்கம் செய்துள்ளது. மீண்டும் கவி மருத்துவராக பணியாற்றத் தேவையான உதவிகளை இன்ஸ்பெக்டர் செய்துள்ளார்.

முடிவு:

திருநங்கையை மருத்துவராக்கிய போலீஸ் அதிகாரி என்று பரவும் தகவல் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உண்மையில் மருத்துவம் படித்து திருநங்கையாக மாறிய நபருக்கு மருத்துவப் பணியைத் தொடர இன்ஸ்பெக்டர் உதவி செய்துள்ளார் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிச்சை எடுத்த திருநங்கையை மருத்துவராக்கிய போலீஸ் அதிகாரி என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: MISLEADING