
‘’முதலமைச்சர் பதவியேற்ற 48 மணி நேரத்தில் புதிய காரில் வலம் வந்த ரேகா குப்தா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ முதலமைச்சராக பதவியேற்ற 48 மணி நேரத்தில் அதி நவீன சொகுசு கார் எப்படி வந்தது??
அதுவும் பேன்சி நம்பரோடு.. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஒன்றிய பாசிச பாஜக.💦💦 ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதேபோன்று, ‘’ பாஜக பதவி ஏற்ற 48 மணி நேரத்தில் சொகுசு காரில் வலம் வந்த டெல்லி பாஜக முதலமைச்சர். இவனுங்க தான் ஊருக்கு உபதேசம் செய்யறாங்க. நேர்மையா தேர்தல்ல சந்திக்க துப்பு இல்லை பாஜகவிற்கு. இவனுங்க லட்சணத்தை வெளிப்படையா கிழித்த @DrSharmila15 அவர்களுக்கு நன்றி,’’ என்று குறிப்பிட்டு, சிலர் தகவல் பரப்புகின்றனர்.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். இந்த வீடியோவில் IANS வாட்டர்மார்க் உள்ளது.
இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது, Delhi: CM security arrived to escort Rekha Gupta, for the official proceedings என்ற தலைப்பில், X வலைதளத்தில் IANS வெளியிட்ட பதிவு நமக்குக் கிடைத்தது.
அடுத்தப்படியாக, அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தபோது உபயோகித்த வாகனத்தில்தான் ரேகா குப்தா, தனது பதவியேற்பு விழாவிற்கு வருவதாக, மேலும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
குறிப்பிட்ட வாகனத்தின் பதிவு எண் (DL11CM0001) வைத்து, தகவல் தேடியபோது கடந்த 2022ம் ஆண்டு, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்காலத்திலேயே இது பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்தது.
இது மட்டுமின்றி அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சராக இருந்தபோது இதே வாகனத்தை உபயோகித்துள்ளார். அதற்கான ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நமது Fact Crescendo English ஏற்கனவே விரிவான ஃபேக்ட்செக் வெளியிட்டுள்ளது.
இவற்றின் அடிப்படையில், அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையே ரேகா குப்தா உபயோகித்துள்ளதாக, நமக்கு தெளிவாகிறது. ஆனால், வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் ரேகா குப்தா புது கார் வாங்கியதாக, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:முதலமைச்சர் பதவியேற்ற 48 மணி நேரத்தில் புதிய காரில் வலம் வந்த ரேகா குப்தா என்ற தகவல் உண்மையா?
Written By: Pankaj IyerResult: Misleading
