கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயமானதாக மத்திய அரசு அறிவித்ததாகத் தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது. இதை வைத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது என்று அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், "தமிழ்நாட்டில் 57 ஆயிரம் பெண்கள் மாயம். தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 57,918 பேர் மாயமாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "எந்த கொம்பனும் குறைகூற முடியாத நல்லாட்சியில் சட்டம் ஒழுங்கு. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 57,918 பேர் மாயமாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Mahalingam V Admk என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 30ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

https://twitter.com/ThanthiTV/status/1685643568805978112

Archive

உண்மை அறிவோம்:

2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 13.13 லட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போய் உள்ளனர் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 1.6 லட்சம் பெண்களும், 38,234 சிறுமிகளும் காணாமல் போனதாகவும், அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்திருந்தன.

தமிழ் ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. மேலும், பெண்கள், சிறுமிகள் மாயமாவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: dinamalar.com I Archive

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயமானதாக தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது. எல்லா ஊடகங்களிலும் 2019ல் இருந்து குறிப்பிட்டிருக்கையில், தந்தி டிவி-யில் மட்டும் கடந்த மூன்று ஆண்டு என்று குறிப்பிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் இது தொடர்பாக வெளியான செய்திகளை பார்த்தோம். ஆங்கில ஊடகங்களில் தேசிய அளவில் பெண்கள் மாயமானதை தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் அடிப்படையில் 2019ம் ஆண்டு 82 ஆயிரம் சிறுமிகள் காணாமல் போனதாகவும் அதில் 49 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே ஆண்டு 3.29 லட்சம் பெண்கள் காணாமல் போனதாகவும் அதில் 1.68 லட்சம் பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 2020ம் ஆண்டு நாடு முழுவதும் 3.44 லட்சம் பெண்கள் காணாமல் போயிருந்தனர். அவர்களில் 2.24 லட்சம் பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 2021ம் ஆண்டு 90,113 சிறுமிகள் மாயமானதாகவும் அவர்களில் 58,980 சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே ஆண்டில் 3,75,058 பெண்கள் மாயமானதாகவும் அவர்களில் 2,02,298 பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சர் அளித்த பதில் தொடர்பாக மாநிலங்களவை இணையதளத்தில் தேடினோம். 2023 ஜூலை 26ம் தேதி பெண்கள் காணாமல் போவது தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதில் அளித்திருப்பது தெரிந்தது. அவரது பதிலின் கடைசி பக்கத்தில், மாநிலங்கள் வாரியாக காணாமல் போன பெண்கள், சிறுமிகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் இடம் பெற்றிருந்தது. அதில், 2019, 2020, 2021 என்று ஆண்டு வாரியாக தெளிவாக பட்டியல் குறிப்பிடப்பட்டிருந்தது.

2019, 2020ல் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் இல்லை. 2019, 20 ஆகிய ஆண்டுகளில் முழுமையாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுதான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது. 2021ல் மே தொடக்கம் வரை அ.தி.மு.க தான் ஆட்சியில் இருந்தது. 2021 மே மாதம் தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. கிட்டதட்ட 9 மாதங்கள் தான் தி.மு.க ஆட்சிக் காலம் வருகிறது. தங்கள் ஆட்சிக் காலத்தில் பெண்கள் மாயமானது பற்றிய தகவல் இது என்பது கூட தெரியாமல் அ.தி.மு.க-விர் தி.மு.க-வை விமர்சித்து வருவதை காண முடிகிறது. இதன் மூலம் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது.

நம்முடைய ஆய்வில், தந்தி டிவி வெளியிட்ட செய்தியில் "கடந்த" என்ற வார்த்தையை சேர்த்ததன் உண்மையுடன் தவறான தகவலை சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. மேலும், காணாமல் போய் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல், புள்ளிவிவரத்தை அது வெளியிடவில்லை. மத்திய உள்துறை இணை அமைச்சரின் பதிலில் கடந்த மூன்று ஆண்டு என்று குறிப்பிடப்படவில்லை. 2019, 2020, 2021 என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

"கடந்த மூன்று ஆண்டு" என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் தற்போது நடந்து வரும் தி.மு.க ஆட்சியில் பெண்கள் அதிக அளவில் மாயமாகி வருகின்றனர் என்றும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் அதிமுக, பாஜக-வினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 57 ஆயிரம் பெண்கள், சிறுமிகள் காணாமல் போனதாக பரவும் தகவல் பாதி உண்மை பாதி தவறானது என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தி.மு.க ஆட்சியில் 57 ஆயிரம் பெண்கள் மாயம் என்று மத்திய அரசு கூறியதா?

Written By: Chendur Pandian

Result: Misleading