இரண்டு இறக்கைகளுடன் பிறந்த மனித குழந்தை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

குழந்தை ஒன்றுக்கு இறகு இருப்பது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் அந்த குழந்தை பறக்கிறது. நிலைத் தகவலில், "இரண்டு இறக்கைகளுடன் பிறந்து பறவை போல குழந்தை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இறக்கையுடன் பிறந்த குழந்தை என்று இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை. உண்மையில் அப்படி நடந்திருந்தால் அந்த குழந்தை பற்றி அந்த குழந்தையின் ஒவ்வொரு நாள் நிகழ்வு பற்றி ஏராளமான செய்தி மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருக்கும். ஆனால் அப்படி எந்த செய்தியும் இல்லை.

மேலும், இந்த வீடியோ எடுக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது சினிமா அல்லது ஓடிடி தொடர் நாடகம் போல் உள்ளது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது Ricky (ரிக்கி) என்ற பிரெஞ்சு மொழியில் வெளியான திரைப்படத்தின் காட்சி இது என்பது தெரியவந்தது. இந்த திரைப்படம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது. 2009ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளி வந்தது என்றும், தொழிற்சாலையில் பணியாற்றும் தம்பதி இறக்கையுடன் பிறந்த குழந்தையால் வரும் பிரச்னையை எப்படி சமாளித்தார்கள் என்பதே கதை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தின் காட்சிகளை வெட்டி ஒட்டி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: imdb.com I Archive

இதன் மூலம் இறக்கையுடன் பிறந்த குழந்தை என்ற தகவல் தவறானது என்பதும், இது திரைப்படத்தின் காட்சி என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2009ம் ஆண்டு வெளியான இறக்கையுடன் பிறந்த குழந்தை பற்றிய பிரெஞ்சு சினிமா திரைப்படத்தின் காட்சிகளை உண்மையான நிகழ்வு போல சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இறக்கைகளுடன் பிறந்த குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False