FACT CHECK: இந்திய தேசியக் கொடியை செருப்பால் அவமதித்த விவசாயிகள் என்று பகிரப்படும் பழைய படம்!

இந்தியா | India சமூக ஊடகம் | Social மருத்துவம் I Medical

இந்திய தேசியக் கொடியை செருப்பால் அடித்து அவமரியாதை செய்த விவசாயிகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். சீக்கியர்கள் போராட்டத்துக்கு மத்தியில் ஒருவர் இந்திய தேசியக் கொடியை செருப்பால் அடித்து அவமரியாதை செய்யும் புகைப்படம் உள்ளது. அதற்கு மேல், “இவனுகள விவசாயினு சொன்ன செருப்பால அடிங்க மக்கா…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Republic Tamil News என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Prabu Prabu Prsbu என்பவர் 2020 டிசம்பர் 30 அன்று பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வெளிநாடுகளில் நடந்த சீக்கியர்கள் தனிநாடு கோரி நடத்தி வரும் போராட்டங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை எல்லாம் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நடந்தது கூறி பலரும் பதிவிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்யும் புகைப்படம் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் உள்ள கொடியில் சீக்கியர்களின் சின்னம் உள்ளது. மேலும், டெல்லியில் தற்போது போராட்டம் நடந்து வரும் இடம் போல தெரியவில்லை. போராட்டத்தில் பங்கேற்றவர் ‘சீக் லைஃப்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட டிஷர்ட் அணிந்துள்ளார். இவை எல்லாம் இதுவும் பழைய படமாக இருக்கலாம் என்பதற்கான வாய்ப்பை அதிகரித்தன.

எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் 2013ம் ஆண்டு முதல் பல சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதை காண முடிந்தது. ஆனால், எங்கு நடந்தது, எதற்காக இந்த போராட்டம் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.

Archive

பாகிஸ்தான் ஆதரவு பிளாக் ஒன்றில் இந்த புகைப்படம் 2013ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. புகைப்படம் பற்றிய எந்த தகவலும் இல்லை.

அசல் பதிவைக் காண: hateindiaendindia.blogspot.com I Archive

அதே நேரத்தில் இந்திய விவசாயிகள் போராட்டம் என்பது இந்திய அரசு விவசாய சட்டத்தைக் கொண்டு வந்ததில் இருந்து தொடங்கியது. கடந்த 2020 செப்டம்பர் மாதம் விவசாய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். அதற்கு முன்பு இப்படி ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது என்று தெரிந்ததும் 2020 ஆகஸ்டில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தொடக்கத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் என்ற அளவில் இருந்தது. சட்டம் இயற்றப்பட்டதும் அது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்தது. அதாவது செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இதன் மூலம் 2013ம் ஆண்டு நடந்த சீக்கியர்களின் போராட்ட படத்தை தற்போது 2020 டிசம்பரில் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. 

முடிவு:

2013ம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் படத்தை 2020 விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:FACT CHECK: இந்திய தேசியக் கொடியை செருப்பால் அவமதித்த விவசாயிகள் என்று பகிரப்படும் பழைய படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False