பாஜக-வுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

டிடிவி தினகரனின் பேட்டி வீடியோ எக்ஸ் (ட்விட்டர்) தளததில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "எதுக்கு நாங்க சூசைட்... கிணற்றில் விழ போவோமா? பிஜேபி நோட்டோவுடன் போட்டிபோடும் கட்சி தமிழ்நாட்ல" என்று கூறுகிறார். ஆனால், நிலைத் தகவலில், "பாஜகவுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது : டிடிவி தினகரன் திடீர் ஆவேசம்🤣🤣🤣" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று சில வருடங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் கூறியிருந்தார். அவரே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்தார். அப்போது அவரது பழைய பேச்சு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. தற்போது, நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்தும் தோல்வி அடைந்துவிட்ட நிலையில் பாஜக-வுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமம் என்று டிடிவி தினகரன் கூறியது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று மட்டும் ஆராய்ந்தோம்.

முதலில் இந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதா அல்லது பழையதா என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். யூடியூபில் பாஜக கூட்டணி, டிடிவி தினகரன், தற்கொலை என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டு டிடிவி தினகரன் அளித்த பேட்டி கிடைத்தது. இந்த வீடியோவை தான் எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள் என்பதும் உறுதியானது.

அடுத்ததாக, 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பாஜக-வுடன் கூட்டணி அமைத்தது தற்கொலைக்கு சமம் என்று டிடிவி தினகரன் கூறினாரா என்று ஆய்வு செய்தோம். டிடிவி தினகரன் அப்படிக் கூறியதாக எந்த செய்தியும் இல்லை. தேர்தல் தோல்வி தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில் கூட, "உண்ண மறந்து, உறக்கம் தொலைத்து தன்னலம் கருதாமல் கழகத்திற்காக ஒவ்வொரு நொடியும் உழைத்த என் உயிரினும் மேலான தொண்டர்களுக்கும் அனைத்து நிலையிலான நிர்வாகிகளுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்" என்று தான் கூறியிருந்தார். பாஜக-வை அவர் எங்கும் விமர்சிக்கவில்லை.

Archive

பாஜக-வுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி சமீபத்தில் கூறியதாக எந்த பதிவும் இல்லை. இதை உறுதி செய்துகொள்ள அமமுக நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் "டிடிவி தினகரன் அப்படிக் கூறவில்லை, பழைய பேட்டியைப் புதிதுபோல பகிர்ந்திருக்கலாம்" என்றார்.

பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம் என்று முன்பு டிடிவி தினகரன் கூறியது உண்மைதான். ஆனால் கூட்டணி அமைத்து தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, கூட்டணி அமைத்தது தற்கொலைக்கு சமம் என்று அவர் எங்கும் கூறவில்லை. இதன் அடிப்படையில் டிடிவி தினகரன் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாஜக-வுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமம் என்று டிடிவி தினகரன் தடீர் ஆவேசம் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜகவுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்கு சமமானது என்று டிடிவி தினகரன் கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False