
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படத்தின் போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படத்தின் போஸ்டர் மற்றும் ஓட்டோ என்ற ஆடை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றாக இருப்பது போன்று பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதலெல்லாம் படத்தைத்தான் காப்பி அடிச்சுட்டு இருந்தீங்க… ஆனா இப்போ…. பரிதாப நிலையில் தமிழ் சினிமா !” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை சாமுராய் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு என்ற படத்தின் போஸ்டர் வெளியானது. உடனே, இந்த போஸ்டர் துல்கர் சல்மானின் விளம்பர படத்தின் காப்பி என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என ஆய்வு செய்தோம்.
துல்கர் சல்மானின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது வாரிசு பட போஸ்டர் வெளியானதற்கு பிறகே அதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை காண முடிந்தது. அதற்கு முன்பு ஓட்டோ நிறுவனம் இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டதாக பதிவு எதுவும் கிடைக்கவில்லை. ஓட்டோ இணையதளத்தில் தேடிய போது இப்படி எந்த ஒரு விளம்பரமும் நமக்கு கிடைக்கவில்லை. மேலும் ஓட்டோ விளம்பரங்களின் கீழ் “Shirts, Trousers, Jeans, T-Shirts என மட்டுமே சிறிய அளவில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் “The Boss Returns” என்று இருந்தது. இது வாரிசு திரைப்படத்தின் “டேக் லைன்” ஆகும்.

மேலும் துல்கர் சல்மான் விளம்பர படத்தில் “The Boss Returns” என்ற டேக் லைனுக்கு முன்பு அங்கிருந்து அகற்றி சற்று தள்ளி வைக்க முயன்றிருப்பது தெரிகிறது. கத்தரித்து எடுத்த பகுதியை சரியாக அழிக்காமல் விட்டுள்ளனர். ஒரு நிறுவனம் விளம்பரம் வெளியிடும் போது இதைக் கூட கவனிக்காமல் விடாது. விஷமத்தனமாக போட்டோ எடிட் செய்து வெளியிடுபவர்கள் இப்படி சின்ன சின்ன தவறுகள் செய்வது வாடிக்கைதான்.
விஜய் பட போஸ்டரின் கீழ் பகுதியில் திரைப்படத்தில் பணியாற்றி வரும் கலைஞர்கள் பெயர் இடம் பெற்ற பகுதியில் ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியை பெரிதுபடுத்தி பார்த்த போது பெயர் அழிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விஜய் மற்றும் துல்கர் சல்மான் புகைப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி மாற்றிப் பார்த்த போது இரு படங்களிலும் தலை மற்றும் பெயர் மட்டும் மாறுவதைக் காண முடிந்தது. இதனால் துல்கர் சல்மானின் தலையை மட்டும் வேறு ஏதோ ஒரு புகைப்படத்திலிருந்து வெட்டி எடுத்து இதில் வைத்திருப்பது தெரிந்தது. அந்த தலைக்கு உரியப் படத்தை தேடினோம். ஓட்டோ இணையதளத்தில் துல்கர் சல்மான் கடற்கரையில் நின்று போஸ் கொடுக்கும் புகைப்படம் கிடைத்தது. அந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் தலையை மட்டும் தனியாக எடிட் செய்து எடுத்து, போட்டோஷாப் முறையில் விஜய்யின் வாரிசு பட போஸ்டரில் வைத்து பதிவிட்டிருப்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
தன்னுடைய விளம்பரத்தை விஜய் படத்தில் காப்பி அடித்திருந்தால் அது பற்றி துல்கர் ஏதாவது சொல்லியிருப்பார். அப்படி ஏதாவது கருத்து கூறியுள்ளாரா என அறிய அவரது ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். வாரிசு படத்தின் போஸ்டரை பகிர்ந்து நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்தை துல்கர் சல்மான் கூறியிருந்தார்.
நடிகர் விஜய்யை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், வாரிசு பட போஸ்டரை எடிட் செய்து போஸ்டரைக் கூட காப்பி அடித்துள்ளனர் என விஷமத்தனமாக வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
முடிவு:
நடிகர் விஜய்யின் வாரிசு பட போஸ்டரை எடிட் செய்து வெளியிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நடிகர் விஜய்யின் வாரிசு பட போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Altered
