கலியுகத்தில் பசு மாடு என்று குறிப்பிட்டு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சீல் என்ற கடல் நாயின் தலையை ஏஐ மூலம் மாற்றி, பசு மாடு ஒன்று கடல் நாய் போன்று தோற்றம் அளிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோ மீது "பசுமாடு நந்தி யாக" என்றும் நிலைத் தகவலில், "கலியுகத்தில் இன்னும் எத்தனை அதிசயங்களை காணப் போகிறோமோ" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஏஐ தொழில்நுட்பம் மூலம் பல வீடியோக்கள் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டிருக்கும் வரை பிரச்னை இல்லை. இந்த வீடியோ உண்மையானது என்ற அர்த்தத்தில் பரவும் போது குழப்பம் ஏற்படுகிறது. அப்படித்தான் கலியுகத்தில் என்ன அதிசயங்களை எல்லாம் பார்க்கப் போகிறோமோ என்று இந்த வீடியோ உண்மை என்பது போன்று பகிர்ந்துள்ளனர்.

பார்க்கும் போதே வீடியோ உண்மையானது இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது. பசுவின் தலைக்கும் உடலுக்கும் நிறத்தில். பிரதிபலிப்பில் வித்தியாசம் இருப்பதைக் காணலாம். மேலும், பின்னால் நிற்கும் ஒரு நபருக்கு மூன்று கால்கள் இருப்பது போன்று உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் இப்போதுதான் வரத் தொடங்கியுள்ளது. இதில் இப்படி சில தவறுகள் ஏற்படுவது இயல்பானதுதான். அந்த தவறே அதை ஏஐ விடியோ அல்லது புகைப்படம் என்பதை உறுதி செய்துவிடும்.

சரி, ஆதாரங்கள் அடிப்படையில் இது ஏஐ என்று உறுதி செய்ய ஆய்வைத் தொடர்ந்தோம். ஆனால் இந்த வீடியோவை யார் உருவாக்கினார் என்பது பற்றிய தகவலை கண்டறிய முடியவில்லை. அதே நேரத்தில் பசுவுக்கு பதில் புலியின் தலையை வைத்து எடிட் செய்த வீடியோக்கள் தான் நமக்குக் கிடைத்தன. அவரவர் அவரவருக்கு விருப்பமான விலங்கை வைத்து வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற சூழலில் உண்மையாக இந்த வீடியோவை உருவாக்கியவர் விவரம் நமக்குக் கிடைக்கவில்லை.

அடுத்ததாக இந்த வீடியோ ஏஐ-ல் உருவாக்கப்பட்டதுதானா என்பதை அறிய உதவும் huggingface.co போன்ற சில இணையதளங்களில் இந்த வீடியோ காட்சிகளை பதிவேற்றித் தேடினோம். அவை எல்லாம் இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்மோ மலையாளத்திலும் கட்டுரை வெளியாகி உள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உண்மையில்லை, ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கடலில் வாழும் பசு என்று பரவும் வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கலியுகத்தில் பசு மாடு என்று சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False